2 பெண்களிடம் செயின் பறிப்பு: தடுத்த போது விரல் துண்டானது
கிரிநகர்: அரிவாளை காண்பித்து, இரண்டு பெண்களை மிரட்டி தங்க செயின் பறிக்கப்பட்டது. இச்சம்பவத்தில், ஒரு பெண்ணின் கை விரல் துண்டானது. பெங்களூரு, கிரிநகரின் ஈஸ்வரி நகரில் விநாயகர் சிலை வைத்து, விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, இன்னிசை கச்சேரி நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்றிருந்த உஷா, வரலட்சுமி ஆகிய இரு பெண்களும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், உஷாவின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி, அவர் அணிந்துள்ள தங்கச்செயினை கழற்றி தரும்படி கேட்டுள்ளனர். அவரும் பயந்து போய் செயினை கழற்றிக் கொடுத்தார். அதேபோன்று வரலட்சுமியிடமும் மிரட்டினர். ஆனால், அவர் மறுத்து அரிவாளை தள்ளியபோது, அவரது கை விரல் துண்டானது. அவரது கழுத்தில் இருந்த தங்கச்செயினை பறித்துக் கொண்டு, மர்ம நபர்கள் தப்பினர். உஷாவின் 10 கிராம் தங்கச்செயின், வரலட்சுமியின் 45 கிராம் தங்க செயின் பறிபோனது. சம்பவத்தில் காயமடைந்த வரலட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கிரிநகர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர். இதுபோன்று, இந்திராநகர், கொத்தனுார், கோனனகுன்டே பகுதிகளிலும் அரிவாளை காண்பித்து மிரட்டி, தங்க நகைகளை பறித்துச் சென்றதாக புகார் பதிவாகியுள்ளது. வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.