சிக்கபல்லாப்பூர், பெங்களூரு தெற்கு மாவட்டங்களுக்கு இன்று வயது 19
கர்நாடகாவில் 30, 31வது மாவட்டங்கள் உதயமாகி இன்றுடன் 19வது ஆண்டில் கால் பதிக்கிறது. கர்நாடகாவில் கோலார் மாவட்டத்தை பிரித்து 30வது மாவட்டமாக சிக்கபல்லாப்பூர் மாவட்டம் உதயமாகி இன்று, 19வது ஆண்டில் கால் பதிக்கிறது. கடந்த 2007ல் முதல்வராக இருந்த எச்.டி.குமாரசாமி புதிதாக ராம்நகர், சிக்கபல்லாப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை உருவாக்கினார். இதில், கோலார் மாவட்டத்தில் இருந்த சிக்கபல்லாப்பூர், சிந்தாமணி, பாகேபள்ளி, சித்லகட்டா, கவுரிபிதனுார் ஆகிய தாலுகாகளை கொண்டு, புதியதாக சிக்கபல்லாப்பூர் மாவட்டம், அந்த ஆண்டு ஆகஸ்ட் 23ல் அமைக்கப்பட்டது. இதன் மக்கள் தொகை 15 லட்சம். இந்த மாவட்டத்தில் புகழ்பெற்ற நந்தி மலை உள்ளது. இந்த மலை ஏற்றத்துக்கு 'ரோப் வே' அமைக்க 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் இன்னும் துவங்கவே இல்லை. இம்மாவட்டத்திற்கான குடிநீர் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு சிறியது மற்றும் பெரியதுமான 2,200 ஏரிகள் உள்ளன. இவைகளை துார்வாரி சீரமைக்க வேண்டும். இந்த ஏரிகளின் நீர் தான், விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்குகிறது. சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில் ஆன்மிக தலமாக விளங்குவது கைவாரா மலை. இங்கு பாண்டவர்கள் வாழ்ந்ததாக மகாபாரத கதை கூறுகிறது. பஞ்சலிங்க கோவில்களும், யோகி நாராயண தாத்தையா மடமும் அவரின் ஜீவசமாதியும் உள்ளன. இம்மாவட்டத்தில் பிறந்தவர் தான் நாடறிந்த பொறியாளர், கே.ஆர்.எஸ்., அணையை கட்டிய தலைமை பொறியாளர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா. நாட்டின் மிக உயர்ந்த விருதான 'பாரத ரத்னா' விருது பெற்றவர். பெங்களுரிலிருந்து 65 கி.மீ., துாரத்தில் உள்ளதால், ஏராளமானோர் தினப்பயணியராக வருகின்றனர். வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிக்கபல்லாப்பூர் மாவட்டம் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. ராம்நகர் கர்நாடகாவில் சிக்கபல்லாப்பூரை தொடர்ந்து, 31வது மாவட்டமாக பெங்களூரு ரூரல் மாவட்டமாக இருந்ததை, ராம்நகர் மாவட்டமாக 2007 ஆகஸ்ட் 23ல் அப்போதைய முதல்வர் குமாரசாமி மாற்றினார். இம்மாவட்டத்தில் ராம்நகர், கனகபுரா, மாகடி, சென்னபட்டணா, ஹாரோஹள்ளி ஆகிய தாலுகாக்கள் இருந்தன. கர்நாடகாவில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் முதல்வர்களை இம்மாவட்டம் தான் வழங்கி உள்ளது. கெங்கல் அனுமந்தய்யா, ஹெச்.டி.தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் முதல்வராக இருந்தனர். ராம்நகர் மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயிகளே. இங்குள்ள சுஞ்சி நீர்வீழ்ச்சி, காவிரி பாயும் மேகதாதும் இங்கு தான் உள்ளது. கனவா நீர்த்தேக்கம், ரேவண்ண சித்தேஸ்வரா பெட்டா, சென்னப்பட்டணாவில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளி ஆகியவை மிக முக்கிய இடங்கள். இம்மாவட்டத்திற்கு பெங்களூரு தெற்கு மாவட்டம் என்று மறுபெயர் சூட்டப்பட்டு உள்ளது. மொத்த நிலப்பரப்பு 3,516 சதுர கிலோ மீட்டர். 1,358 சதுர மைல். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 10 கோடியே 82 லட்சத்து 236 பேர் உள்ளனர். இங்குள்ள சென்னப்பட்டணா நகரம், பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், மைசூரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. உலகப் புகழ்பெற்ற பொம்மைகள் கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கு பிரபலமான இடம். கனகபுரா, பசுமையான தாலுகா. பட்டு உற்பத்திக்கு தமிழகத்தின் காஞ்சி, ஆரணி போல புகழ்பெற்ற இடமாக உள்ளது. கிரானைட்ஸ் உற்பத்தியும் அதிகம். இங்கிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி தொழில் அமோகம். இங்குள்ள சுஞ்சி நீர்வீழ்ச்சி, பன்னர கட்டா தேசிய பூங்கா, ஒண்டர்லா, ஸ்னோ சிட்டி, ஆகியவை புகழ் பெற்று விளங்குகிறது. பெங்களுருக்கு மிக அருகில் இருப்பதால், இதற்கு இணையாக சர்வதேச தரத்திற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஓர் சிலிகான் சிட்டியாக பார்க்கப்படுகிறது. இரு மாவட்டமும் உதயமாகி 19வது ஆண்டில் கால் பதிக்கிறது - நமது நிருபர் - .