மார்ச் 7ல் பட்ஜெட் தாக்கல் முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு: ''பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. மார்ச் 7ம் தேதி 2025 - 26ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று பட்ஜெட் தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.பின், அவர் அளித்த பேட்டி:சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் கவர்னர் உரையாற்றுவார். கவர்னரின் உரை மீது, மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் விவாதிக்கப்படும். 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட், மார்ச் 7ம் தேதி தாக்கல் செய்யப்படும். கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆலோசனை குழு முடிவு செய்யும்.விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் அரசு சோர்வடையவில்லை. பல்வேறு துறையினருடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் பரிந்துரைகள் பட்ஜெட்டில் சேர்க்கப்படும். அவர்களுக்கு ஆதரவாக தான், அரசு இருந்து வருகிறது. விவசாய துறையின் வளர்ச்சியை ஆதரிப்போம்.விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் இரண்டும் முயற்சித்து வருகின்றன. விலை உயர்வு ஏற்பட்டதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கமிட்டி தான், மெட்ரோ ரயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.மெட்ரோ தன்னாட்சி அமைப்பாக இருந்தாலும், இக்குழுவில் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் உள்ளனர். விலையை நிர்ணயிக்க மாநில அரசு ஒரு திட்டத்தை முன்வைக்கிறது. ஆனால் விலையை, குழு முடிவு செய்கிறது. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி, இக்குழுவின் தலைவராக உள்ளார்.வாக்குறுதித் திட்டங்கள் நிறுத்தப்படாது. பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அவற்றை உடனடியாக சரிபார்த்து விடுவிப்போம்.மாவட்டம், தாலுகா பஞ்சாயத்து தேர்தல்களுக்கு தயாராக இருக்கிறோம். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தப்படும். கட்சி தலைமை மாற்றம், கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை பொறுத்தது.இவ்வாறு அவர் கூறினார்.பட்ஜெட் தாக்கல் தொடர்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.