உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கை முதல்வர் சித்தராமையா தகவல்

 பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கை முதல்வர் சித்தராமையா தகவல்

- நமது நிருபர் -: ''கர்நாடகாவில் பயிர் சேதம், கரும்பு விவசாயிகளின் பிரச்னை, மேகதாது திட்டம் உட்பட ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமரின் கவனத்து கொண்டு சென்றேன்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். புதுடில்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க முதல்வர் சித்தராமையா சென்றுள்ளார். அதேவேளையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின், முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி: மாநிலத்தின் ஐந்து முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். கனமழையால் 36.02 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மழையால் மாநிலத்தில் மொத்தம் 3,560 கோடி ரூபாய் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. உள் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. மாநில அரசு, பயிர் சேத காப்பீடும் வழங்கி வருகிறது. மத்திய அரசு தான் எப்.ஆர்.பி., எனும் நியாயமான, லாபகரமான விலையை நிர்ணயம் செய்கிறது. கரும்பு விவசாயிகள், ஒரு டன் கரும்புக்கு, 3,500 ரூபாய் கேட்கின்றனர். இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள 81 சர்க்கரை ஆலைகள் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஒரு டன் கரும்புக்கு 3,300 ரூபாய் நிர்ணயம் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட விவசாயிகள், போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இருப்பினும், மத்திய அரசும், சர்க்கரை விலையை நிர்ணயம் செய்கிறது. ஒரு கிலோ சர்க்கரை, 41 ரூபாய் உள்ளது. இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மகதாயி திட்டம், மத்திய அரசின் முன் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, அவர்கள் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாகவும் பிரதமரிடம் முறையிட்டுள்ளோம். அதுபோன்று மேகதாது திட்டம் தொடர்பான தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற தடை இல்லை. திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த பிரச்னையும் இல்லை. இதனால், 67 டி.எம்.சி., தண்ணீர் சேகரிக்கப்படும். இயற்கையாகவே, 177.25 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படும். குடிநீர் திட்டம், மின் உற்பத்தி திட்டம் என, தமிழகத்துக்கு நன்மை அளிக்கும். ராய்ச்சூரில் எய்ம்ஸ் அமைப்பது தொடர்பாகவும், பிரதமரிடம் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி