உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மார்ச் 1ல் சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் முதல்வர் துவக்கம்

மார்ச் 1ல் சர்வதேச திரைப்பட விழா பெங்களூரில் முதல்வர் துவக்கம்

பெங்களூரு: ''பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா, மார்ச் 1ல் துவங்கவுள்ளது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார்,'' என திரைப்பட விழா ஒருங்கிணைப்பு குழு தலைவரும், செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை செயலருமான காவேரி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மார்ச் 1ல் பெங்களூரு திரைப்பட விழாவை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பார். துணை முதல்வர் சிவகுமார் உட்பட, திரையுலக பிரமுகர்கள் பங்கேற்பர். பெங்களூரின் ராஜாஜிநகரில் உள்ள, பிவிஆர் சினிமாஸ் ஓராயன் மாலில் உள்ள, 11 ஸ்க்ரீன்களில் மார்ச் 2 முதல், திரைப்படங்களை காண பொது மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.திரைப்பட விழாவில் 60 நாடுகளின், 200 மிக சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அந்தந்த நாடுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும். உலகின் பிரபலமான திரைப்பட விழாக்களில் பங்கேற்ற சிறந்த திரைப்படங்களும், பெங்களூரு திரைப்பட விழாவில் பங்கேற்கின்றன.அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா, பிரேசில், ஜார்ஜியா, பெல்ஜியம், நெதர்லாந்து, பின்லாந்து, ஈரான், அர்ஜென்டினா, கனடா, டென்மார்க் உட்பட பல்வேறு நாடுகளின் மிக சிறந்த படங்கள் பங்கேற்கின்றன. இன்று உலகில் பல பிரச்னைகள் உள்ளன. அனைத்து மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையே, நமக்கு முக்கியம். இதை உணர்த்தும் நோக்கில், திரைப்பட விழா நடக்கிறது. திரைப்பட விழா நடக்கும் நாட்களில், தினமும் திரைப்படம், தொழில்நுட்பம் தொடர்பாக வல்லுனர்களுடன் கருத்தரங்குகள் நடக்கும். கன்னட திரையுலகின் முதல் பேசும் படமான, 'சதி சுலோச்சனா' 1934 மார்ச் 3ம் தேதி திரைக்கு வந்தது. இந்த நாள் சினிமா தினமாக கொண்டாடப்படுகிறது. 91 ஆண்டுகளாக கன்னட திரையுலகம் நடந்து வந்த பாதை குறித்தும், கருத்தரங்கு நடக்கும். திரையுலகில் சாதனை செய்தவர்கள் நினைவு கூறப்படுவர்.மார்ச் 8ம் தேதி, திரைப்பட நிறைவு விழா நடக்கும். கவர்னர் தாவர்சந்த் கெலாட் தலைமை வகிப்பார். அன்றைய தினம் ஏசியன், இந்திய மற்றும் கன்னட திரைப்பட விழாக்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, விருது வழங்கப்படும். திரைப்பட வலை தளத்தில் பிரதிநிதிகள் பதிவு, இன்று (நேற்று) முதல் துவக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் www.biffes.org ல் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரதிநிதிகளாக தகுதி பெற்றவர்களாவர்.பொது மக்கள் 800 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள், திரையுலகை சார்ந்தவர்கள் 400 ரூபாய் கட்டணம் செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்து கொண்ட பிரதிநிதிகள், பிப்ரவரி 18 முதல் கர்நாடக திரைப்பட அகாடமி, நந்தினி லே - அவுட், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, சிவானந்த சதுக்கம், காந்தி நகரில் நுழைவு கார்டுகளை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி