கல்வி துறை அலுவலகத்தில் காக்டெயில் மது விருந்து
சித்ரதுர்கா: மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திலேயே, ஊழியர்கள் மது விருந்து நடத்திய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பலரும் வலியுறுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில், அதிகாரி குடிபோதையில் வருவது, ஆசிரியர்களே குடித்துவிட்டு, பாடம் நடத்த வரு வது, பள்ளி முன்பாகவே விழுந்து கிடப்பது போன்ற சம்பவங்கள், அவ்வப்போது நடக்கின்றன. இப்போது கல்வித்துறை அலுவலகத்திலேயே, மது விருந்து நடத்தியுள்ளனர். சித்ரதுர்கா மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், புதிதாக கார் வாங்கியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம், அலுவலகத்திலேயே சக ஊழியர்களுக்கு மது விருந்து கொடுத்தார். 20 லிட்டர் வாட்டர் கேனில், கல்வித்துறை இணை இயக்குநரின் கார் ஓட்டுநர், மது பாட்டில்களை திறந்து ஊற்றினார். அதை, 'காக்டெயில்' போல அனைவரும் எடுத்து அருந்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 'சமுதாயத்துக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய கல்வித்துறை ஊழியர்களே, தலைகுனியும் செயலை செய்துள்ளனர். 'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.