பிரச்னைக்குரிய கருத்துகளை பதிவிட்டால் கடும் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
மங்களூரு: ''சமூக வலைதளங்களில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.மங்களூரு பஜ்பே அருகே கின்னிபதவில், கடந்த 1ம் தேதி பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுகாஸ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்று கூறி, சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டனர். இதுதொடர்பாக மங்களூரில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன.இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:சமூக வலைதளங்களை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். சமூகங்கள் இடையில் பிரச்னை துாண்டவும், போலி செய்திகளை பரப்பி அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதனை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இரு சமூகத்திற்கு இடையில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் பதிவான 30 வழக்குகளை, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சிலர் சமூக வலைதளங்களில் போலியான சுயவிபரம், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி செய்தால் போலீசார் நம்மை பிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றனர். வெளிநாட்டில் பதிவான சமூக வலைதள கணக்குகளை தேசிய அமைப்புகள் மூலம் கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளங்களில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டால், யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இரண்டு சமூகத்திற்கு இடையில் பகைமை ஏற்படுத்தும் வகையில், பதிவு வெளியிட்டால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். வன்முறையை துாண்டி விட்டால் ஆறு மாதம் சிறை கிடைக்கும். மங்களூரில் பொது அமைதியை பேணவும், குற்றங்களை தடுக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். வருகிறார் நட்டா
இந்நிலையில், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வாலை, நேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் சந்தித்து பேசிய பின், அவர் கூறியதாவது: கொல்லப்பட்ட சுகாஸ் ஷெட்டி வீட்டுக்கு, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, வரும் 11ம் தேதி வருகிறார். சுகாஸ் கொலை வழக்கு விசாரணை, சரியான பாதையில் செல்லவில்லை.இது தொடர்பாக நகர போலீஸ் கமிஷனர், மாவட்ட எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினோம். எங்களின் சந்தேகங்களை அவர்களிடம் தெரிவித்தோம்.தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பினருக்கு இக்கொலையில் தொடர்பு உள்ளது. இவ்வழக்கை, என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, வலியுறுத்துவோம். இச்சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.