அவுதும்பர மரத்தை வழிபடுவதை தடுக்க வேலி என புகார்
சிக்கமகளூரு: தத்தாத்ரேயா கோவிலில் உள்ள அவுதும்பர மரத்தை சுற்றி வந்து, பக்தர்கள் வழிபடுவதை தடுக்க தடுப்பு வேலி அமைத்துள்ளதாக சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் மீது பஜ்ரங் தள் குற்றம் சாட்டி உள்ளது.சிக்கமகளூரு அருகே பாபாபுடன் கிரி மலையில், தத்தாத்ரேயா குகை கோவில் உள்ளது. தத்தாவின் பாதம் உள்ள இக்கோவிலில் இரு சமூக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சமூகத்தினர் வழிபட, இன்னொரு சமூகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. கோவில் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.வழக்கமாக தத்தாத்ரேயா கோவில் வளாகத்தில் உள்ள, அவுதும்பர மரத்தை பக்தர்கள் சுற்றி வந்து வழிபடுகின்றனர். தற்போது அந்த மரத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு சிக்கமகளூரு மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்று, பஜ்ரங் தள் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.நீதிமன்றமோ, ஹிந்து சமய அறநிலையத்துறையோ, அவுதும்பர மரத்தை சுற்றி வந்து வழிபட எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. ஆனால் மாவட்ட நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுத்து உள்ளது. உடனடியாக தடுப்பு வேலியை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர். மாவட்ட நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.