பரப்பன அக்ரஹாராவில் பிரபல கைதிகளின் சொகுசு வாழ்க்கைக்கு உடந்தை: மோசடி புகார்களால் ஜெயில் கண்காணிப்பாளர் இடமாற்றம்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 2,200 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். அப்படி இருக்கும்போது, தற்போது 5,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் உட்பட முக்கிய வழக்குகளில் சிக்கிய கைதிகள், வழக்குகளில் தண்டனை பெற்றோர், விசாரணை கைதிகள் இங்கு உள்ளனர். அதிக அளவில் கைதிகள் இருப்பதால், அவர்களை கண்காணிப்பதில் சிறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறையில் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டுகொள்ளாமல், சிறை ஊழியர்கள் விட்டுவிடுகின்றனர். கைதி களிடமோ அவர்களின் உறவினர்களிடமோ சில ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு விலை போகின்றனர். கைதிகளுக்கு தேவையானதை வெளியே இ ருந்து வாங்கிக் கொடுக்கின்றனர். பயங்கரவாதி மன்னா இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற உமேஷ் ஷெட்டி, தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் காதலன் தருண் ஆகிய முக்கிய கைதிகள், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோக்கள், சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பயங்கரவாதி கையில் மொபைல் போன் இருந்ததால், அரசை, எதிர்க்கட்சிகள் துளைத்து எடுத்தன. இந்த விவகாரம், தேசிய அளவில் பேசும் பொருளாக மாறியது. இதையடுத்து சிறையில் நடக்கும் சட்டவிரோதங்களை தடுப்பது பற்றி, பெங்களூரு சேஷாத்ரி ரோட்டில் உள்ள, மாநில சிறைத்துறை தலைமை அலுவலகத்தில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். டி.ஜி.பி., சலீம், பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், போலீஸ் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழக தலைவர் சரத் சந்திரா, சிறை துறை ஐ.ஜி., ஆனந்த் ரெட்டி, சி.சி.பி., இணை கமிஷனர் அஜய் ஹிலோரி உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கெட்ட பெயர் பரமேஸ்வர் பேசும்போது, ''பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகின்றன. இவற்றை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்? இதுபோன்ற சம்பவங்களுக்கு சிறை துறை அதிகாரிகள் தான் முழு பொறுப்பு. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். உங்களால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது,'' என கடுமையாக சாடினார். ''இனி மேல் மாநிலத்தில் உள்ள எந்த சிறையிலும், கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, அவர் உத்தரவிட்டார். பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி: பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த வீடியோ வெளியான நிலையில், முதற்கட்ட விசாரணை அடிப்படையில், பணியில் அலட்சியமாக இருந்த சிறை தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறை கண்காணிப்பாளர் மகேரி, உதவி கண்காணிப்பாளர் அசோக் பஜந்திரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். சிறைக்குள் என்ன நடக்கிறது என்று இன்னும் ஆழமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கூறி இருக்கிறேன். அறிக்கை கிடைத்ததும் தவறு செய்த அதிகாரிகளே சஸ்பெண்ட் செய்வதா அல்லது பணி நீக்கம் செய்வதா என்று முடிவு எடுப்போம். பரப்பன அக்ரஹாரா சிறையை நிர்வகிக்க, முதன்முறையாக ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். கட்டளை மையம் மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் சென்று, சிறைகளில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன, கண்காணிப்பு கேமரா, ஜாமர் சரியாக வேலை செய்கிறதா, கைதிகள் அறைகள் எப்படி உள்ளன என்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சந்தீப் பாட்டீல், அமர்நாத் ரெட்டி, ரிஷ்யந்த், மாவட்ட எஸ்.பி.,க்கள் இருப்பர். மாநிலத்தில் உள்ள சிறைகளின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க, 'வார் ரூம்' எனும் கட்டளை மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். 15 நாட்களுக்கு ஒரு முறை, சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்படும். சிறையில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, புதிதாக 197 வார்டன்கள், 22 பயிற்சியாளர்கள், 3 உதவி கண்காணிப்பாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஐந்து ஆண்டுக்கு மேல் ஒரே சிறையில் பணியாற்றும் அதிகாரிகள், வேறு இடத்திற்கு மாற்றப்படுவர். பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியானதில், ஒரு சில வீடியோக்கள் சமீப காலத்தில் எடுக்கப்பட்டது. மற்ற வீடியோக்கள் 2023ல் பதிவானது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆலோசனை முடிந்த சில மணி நேரங்களில், பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமை கண்காணிப்பாளராக, சிறை துறை எஸ்.பி., அன்ஷு குமாரை நியமித்து, அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் பிரச்னை முடிவுக்கு வருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் தன்வீர் கவுடா இதற்கிடையில் பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் சொகுசாக இருக்கும் வீடியோ வெளியானது பற்றி, சி.சி.பி.,யும் விசாரணையை துவக்கியது. கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின், தீவிர ஆதரவாளரான நடிகர் தன்வீர் கவுடா மீது, சி.சி.பி.,க்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலை 1:45 மணிக்கு விமான நிலையம் சென்ற தன்வீர் கவுடாவின் காரை, நடுரோட்டில் மறித்த சி.சி.பி., போலீசார், சாம்ராஜ்பேட்டில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, தன்வீர் கவுடாவிடம் விசாரித்தனர். காலை 11:45 மணி வரை அவரிடம் விசாரணை நடைபெற்றது. அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து, தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். சிறையில் இருக்கும் தர்ஷன், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு சிறையில் தற்போது எந்த வசதியும் கிடைக்காமல் அவதிப்படுகிறார். தர்ஷன் மட்டும் கஷ்டப்படும்போது, மற்ற கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கைதிகள் வீடியோவை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தன்வீரிடம், சி.சி.பி., போலீசார் விசாரித்து உள்ளனர். சிறையில் இருக்கும் பவன் என்ற கைதி மூலம், வீடியோக்கள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது.
தகவல் பெற்ற என்.ஐ.ஏ.,
பெங்களூரு திலக்நகரை சேர்ந்தவர் ஜுகாத் சகீல் மன்னா. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் இவரை 2022ல் என்.ஐ.ஏ., கைது செய்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இவர், மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானதால், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு வழக்கு பற்றி விபரங்களை சேகரித்துள்ளனர். கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது பற்றி, பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், மூன்று புகார்களும் பதிவாகி உள்ளன.
முதல்வர் வீட்டை
முற்றுகையிட முயற்சி
சிறையில் பயங்கரவாதி மொபைல் போன் பயன்படுத்தியதை கண்டித்து, குமாரகிருபா சாலையில் உள்ள முதல்வரின் கிருஷ்ணா இல்லம் முன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர் தலைமையில், நேற்று காலை பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். முதல்வர், உள்துறை அமைச்சர் பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினர். திடீரென முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். பாதுகா ப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், பா.ஜ.,வினரை தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பா.ஜ., தலைவர்கள், தொண்டர்களை கைது செய்த போலீசார், குண்டுகட்டாக துாக்கிச் சென்று, பஸ், வேன்களில் ஏற்றினர். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பாட்டில்களில் இருந்தது சிறுநீரா?
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் குடிபோதையில் நடனமாடும் வீடியோ வெளியாகி இருந்தது. இந்த வீடியோவில் மூன்று கண்ணாடி பாட்டில்களில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் இருந்தது. அந்த பாட்டில்கள் அருகே சைடிஸ் இருந்ததால், பாட்டில்களில் இருந்தது மது என்று கூறப்பட்டது. ஆனால், பாட்டில்களில் இருந்தது மது இல்லை என்றும், சிறுநீர் கழித்து பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.