புலி கொலையில் நிபந்தனை ஜாமின்
சாம்ராஜ்நகர் : வனப்பகுதியில் ஐந்து புலிகள் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகர் எம்.எம்., ஹில்ஸ் வனப்பகுதியில், கடந்த ஜூன் 26ம் தேதி ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இந்த வழக்கில் மாடராஜு, நாகராஜு, கோனப்பா என மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமின் கோரி மனு அளித்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை, நேற்று கொள்ளேகாலில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி எங்கும் செல்லக்கூடாது எனவும், விசாரணைக்கு முறையாக ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கப்பட்டது. இதற்கிடையில், புலிகளின் இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பாக விசாரணயை முடித்த வனத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜாமினை ரத்து செய்யக்கோரி அரசு வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய எம்.எம்., ஹில்ஸ் வன அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.