காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தது இல்லை
சிக்கபல்லாபூர்: ''தொகுதி மேம்பாட்டுக்காக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் என்னை சந்தித்தது இல்லை,'' என, சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர் தெரிவித்துள்ளார்.சிக்கபல்லாபூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி ஒதுக்குகிறது. ஆனால் கர்நாடகாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக, முதல்வர் சித்தராமையா தினமும் ஊடகங்கள் முன் பொய் பேசுகிறார்.சிக்கபல்லாபூர் தொகுதி மேம்பாட்டுக்காக, மாதந்தோறும் நான் நடத்தும் கூட்டத்தில், சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சரியாக கலந்து கொள்வது இல்லை.அமைச்சர் முனியப்பா மட்டும் ஒரே ஒரு முறை, ரயில்வே பணிகள் தொடர்பாக என்னை சந்தித்தார். மற்றவர்கள் தொகுதியின் மேம்பாட்டுக்காக, என்னை சந்தித்தது இல்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மேம்பாடு சாத்தியம்.அதிகார மோதலால் மக்கள் பாதிக்கப்பட கூடாது. எனக்கு எந்த ஈகோவும் இல்லை. எம்.எல்.ஏ.,க்கள் அழைக்கும் நேரத்தில், அவர்களை சந்திக்க தயாராக உள்ளேன்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி மூத்த அரசியல்வாதி. எங்கள் கட்சியில் இருக்கும்போது, துணை முதல்வராக இருந்துள்ளார். ஆமதாபாத் விமான விபத்திற்கு பொறுப்பு ஏற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று அவர் கூறி இருப்பது சரியல்ல. விபத்து நடப்பது, நாம் கையில் உள்ளதா? கொஞ்சமாவது நியாயமாக பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.