பா.ஜ., பாணியில் காங்கிரசும் தர்மஸ்தலாவுக்கு வாகன பேரணி
மைசூரு: பா.ஜ.,வுக்கு போட்டியாக, காங்கிரஸ் கட்சியினரும் தர்மஸ்தலாவுக்கு வாகன பேரணி நடத்தினர். தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில், அதன் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் மீதான பொய் புகாரை கண்டித்து, பா.ஜ., சார்பில் தர்மஸ்தலாவில் மாநாடு நடந்தது. பெங்களூரு எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் ஏற்பாட்டில், ஹிந்து அமைப்பினர், பா.ஜ., தொண்டர்கள் தர்மஸ்தலாவுக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். 'பா.ஜ.,வுக்கு மட்டும் தான் தர்மஸ்தலா மீது அக்கறை உள்ளதா; எங்களுக்கு இல்லையா?' என, காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். 'நாங்களும் தர்மஸ்தலாவுக்கு வாகன பேரணி செல்வோம்' என்று கூறியிருந்தனர். அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மைசூரு சாமராஜா தொகுதி ஹரிஷ் கவுடா, நரசிம்மராஜா தன்வீர் செய்ட் ஆகியோர் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். 25 பஸ்களில் 2,000க்கும் மேற்பட்ட, காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று காலை மைசூரில் இருந்து தர்மஸ்தலாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து ஹரிஷ் கவுடா அளித்த பேட்டி: பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகளை போன்று, நாங்கள் மேற்கொள்வது அரசியல் பேரணி இல்லை. தர்மத்தை பாதுகாக்கும் வெற்றி பேரணி. தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை மூலம் உண்மையை அரசு வெளி கொண்டு வந்துள்ளது. கோவில் நிர்வாகம் மீதான களங்கம் நீக்கப்பட்டுள்ளது. நாங்களும் சிவ பக்தர்கள் தான். தர்மஸ்தலா செல்கிறோம். இரவு அங்கு தங்குகிறோம். மஞ்சுநாதரை தரிசிக்க உள்ளோம். கோவில் நிர்வாக அதிகாரியிடம் பேசி உள்ளேன். காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி. அனைத்து மதங்களுக்கும் மரியாதை கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தன்வீர் செய்ட் கூறியதாவது: தர்மஸ்தலா வழக்கால் பக்தர்கள் மனம் புண்பட்டு உள்ளது. பா.ஜ., அரசியல் செய்கிறது. எஸ்.ஐ.டி., அமைத்து உண்மையை அரசு வெளி கொண்டு வந்தது. முதலில் எஸ்.ஐ.டி., விசாரணையை வரவேற்றவர்கள் இப்போது எதிர்க்கின்றனர். தர்மஸ்தலா வழக்கின் சதிக்கு, வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததா என எனக்கு தெரியாது. இதுபற்றியும் விசாரிக்கப்பட வேண்டும். சின்னையா கூறும் நபர்களிடம் தீவிர விசாரணை நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.