உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காங்கிரஸ் அரசு புல்டோசர் அரசியல் செய்யவில்லை கேரள முதல்வருக்கு து.முதல்வர் சிவகுமார் பதிலடி

 காங்கிரஸ் அரசு புல்டோசர் அரசியல் செய்யவில்லை கேரள முதல்வருக்கு து.முதல்வர் சிவகுமார் பதிலடி

பெங்களூரு: ''குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், இரவோடு இரவாக குடிசைகள் போட்டு ஆக்கிரமிக்க முயற்சி நடந்தது. அதை கிரேட்டர் பெங்களூரு ஆணையம் தடுத்தது. இதை அறியாமல், கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்,'' என, துணை முதல்வர் சிவகுமார் குற்றம் சாட்டினார். பெங்களூரின் கோகிலு லே - அவுட்டின் பகீரா காலனி மற்றும் வசீம் லே - அவுட்டில் ஐந்து ஏக்கர் நிலம், குப்பை கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்தனர். இதை அறிந்த ஜி.பி.ஏ., எனும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம், குடிசைகளை அகற்றி இடத்தை வசப்படுத்தியது. இதுகுறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், 'எக்ஸ்' வலைதளத்தில், 'பெங்களூரின் பகீரா காலனி, வசீம் லே - அவுட்டில், பல ஆண்டுகளாக வசித்த முஸ்லிம் குடும்பங்களை வீதியில் தள்ளியுள்ளனர். கர்நாடகாவில் புல்டோசர் அரசியல் நடக்கிறது. சங்க பரிவார் செய்யும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை, கர்நாடகா காங்கிரஸ் அரசும் செய்கிறது' என்று விமர்சித்திருந்தார். அத்துடன், கேரள ராஜ்யசபா எம்.பி., ரஹீம் தலைமையிலான குழுவினர், கோகிலு லே - அவுட்டுக்கு நேற்று வருகை தந்தனர். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்து பேசினர். இந்நிலையில், கேரள முதல்வருக்கு பதிலடி கொடுத்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது: பகீரா காலனி மற்றும் வசீம் லே - அவுட்டில், ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு எதிராக, கேரள முதல்வர் விமர்சித்திருப்பது துரதுருஷ்டமானது. அவருக்கு உண்மையான தகவல் தெரியவில்லை. குப்பையை கொட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதால் மக்கள் வசிக்க முடியாது. வசித்தால் உடல் ஆரோக்கியம் பாழாகும். அங்கு உள்ளூரை சேர்ந்த சிலர் மட்டுமே, பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். பலர் வெளியில் இருந்து வந்து, இரவோடு இரவாக குடிசை போட்டு இடத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனர். மூத்தவரான பினராயி விஜயன், இத்தகைய விஷயங்களில் தலையிடுவது சரியல்ல. எங்களுக்கு பெங்களூரை பற்றி தெரியும். இங்கு குடிசை பகுதிகள் உருவாக, நாங்கள் அனுமதியளிக்க மாட்டோம். நில மாபியாக்கள், தங்களின் சுய நலத்துக்காக சதி செய்கின்றனர். சதிகளை நாங்கள் முறியடிப்போம். எங்கள் அரசு எந்தவிதமான புல்டோசர் அரசியலும் செய்யவில்லை. எங்கள் அரசு பொதுச் சொத்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. எங்கள் கட்சி சார்பில், பினராயி விஜயனுக்கு, அறிக்கை அளிப்போம். கேரள காங்கிரசும் அவருக்கு விளக்கம் அளிக்கும். இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா உத்தரவிடுவார். மும்பையை போன்று, பெங்களூரில் குடிசை பகுதிகள் உருவாக அனுமதிக்க முடியாது. பேட்ராயனபுரா சட்டசபை தொகுதி, பெங்களூரின் மத்திய பகுதியில் உள்ளது. அங்கு சிறுபான்மையினர் உட்பட யாராவது வந்து ஆக்கிரமிக்க முயற்சித்தால் சகிக்க முடியாது. அதிகாரிகள் அகற்றிய இடத்தில், சரியான ஆவணங்கள் வைத்துள்ளோருக்கு, மாற்று வசதி செய்யப்படும். இதை பற்றி ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ