உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒன்பது மாணவர்களை டில்லி சுற்றுலா அழைத்து செல்லும் காங்கிரஸ் எம்.பி.,

ஒன்பது மாணவர்களை டில்லி சுற்றுலா அழைத்து செல்லும் காங்கிரஸ் எம்.பி.,

தாவணகெரே: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளியை சேர்ந்த ஒன்பது மாணவர்களை, டில்லிக்கு தாவணகெரே காங்கிரஸ் எம்.பி., பிரபா மல்லிகார்ஜுன் சுற்றுலா அழைத்துச் செல்கிறார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதிக மதிப்பெண்கள் பெறும்படி செய்வது, எங்களின் நோக்கம். மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, டில்லிக்கு சுற்றுலா அனுப்ப திட்டமிட்டுள்ளேன். கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள், தங்களின் கல்விக்கு அரசு பள்ளிகளை நம்பியுள்ளனர். செல்வந்தர்கள் இந்த மாணவர்களுக்கு உதவ முன் வந்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும். அரசு பள்ளிகளை பலப்படுத்தினால், மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். இது நாட்டின் வளர்ச்சிக்கும் காரணமாகும். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ஒன்பது மாணவர்களை டில்லிக்கு சுற்றுலா அனுப்ப ஏற்பாடு செய்கிறோம். இவர்களுக்கான விமான கட்டணம், தங்கும் வசதி, உணவு உட்பட, அனைத்து செலவுகளையும் நானே ஏற்கிறேன். சாதனை செய்த மாணவர்களை, டில்லிக்கு சுற்றுலா அனுப்புவதால் தற்போது எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகம் கிடைக்கும். அவர்களும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர் என, நம்புகிறேன். டில்லியில் ஐந்து நாட்கள் மாணவர்கள் சுற்றுலா செய்வர். இந்தியா கேட், குதுப்மினார், செங்கோட்டை, சுவாமி நாராயணர் கோவில் உட்பட, முக்கியமான இடங்களுக்கு செல்வர். ஒன்பது மாணவர்களுடன், ஒரு ஆண் ஆசிரியர் மற்றும் ஒரு மகளிர் ஆசிரியை இருப்பர். வரும் திங்கட்கிழமையன்று, ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவர். சுற்றுலா அனுபவம், மாணவர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை