பாகல்கோட் தொகுதி இடைத்தேர்தல் சீட் பெற காங்கிரசில் குடுமிப்பிடி
கர்நாடக காங்கிரசில் மூத்த தலைவர்களில் ஒருவர் எச்.ஒய்.மேட்டி, 79. பாகல்கோட் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். முன்னாள் அமைச்சரான இவர், முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து பாகல்கோட் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். அதற்குள் இடைத்தேர்தலில் 'சீட்' பெற காங்கிரசில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தன் ஆதரவாளரான மேட்டி குடும்பத்தில், அவரது இரு மகன்களில் யாராவது ஒருவருக்கு, சீட் வழங்கலாம் என்று சித்தராமையா நினைக்கிறார். ஆனால் துணை முதல்வர் சிவகுமார் ஆதரவாளர்கள் பலரும், தங்களுக்கு சீட் கேட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பாகல்கோட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நஞ்சய்ய மத், முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல், பாகல்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் அஜய்குமார் சர்நாயக் ஆகியோரும், 'சீட்' பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஹுன்குந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், தன் மனைவி வீணாவுக்கு, சீட் வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் பாகல்கோட்டில் போட்டியிட வீணா முயற்சித்தார். ஆனால் சர்க்கரை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், தன் செல்வாக்கை பயன்படுத்தி, மகள் சம்யுக்தாவுக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். ஆனாலும் சம்யுக்தா தோல்வி அடைந்தார். இதனால் இம்முறை, 'என் மனைவிக்கே சீட் வழங்க வேண்டும்' என, சித்தராமையாவுக்கு, விஜயானந்த் காசப்பனவர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து உள்ளார். 'மூத்த எம்.எல்.ஏ.,வான எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக காங்கிரசுக்கு விசுவாசமாக உள்ளோம். இதை கருத்தில் கொள்ளுங்கள்' என, அவர் கூறி வருகிறாராம். சீட் கேட்டு பலரும் குடுமிப்பிடி சண்டை போடுவதால், யாருக்கு வழங்குவது என்று முடிவு எடுக்கும் விஷயத்தில், காங்கிரஸ் மேலிடத்திற்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலின்போது, சென்னப்பட்டணா, ஷிகாவி ஆகிய தொகுதிகளில் யாருக்கு சீட் வழங்குவது என்பதில், கடும் குழப்பம் ஏற்பட்டது. கடைசி நேரம் வரை வேட்பாளரை அறிவிக்காமல், வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பு, காங்கிரஸ் மேலிடம் பெயர் பட்டியலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு தேதி அறிவிக்கும் முன்பே, காங்கிரசில் ஏற்பட்டுள்ள குடுமிப்பிடி சண்டை, தேர்தல் தேதி அறிவித்த பின், மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. பா.ஜ., சார்பில் பாகல்கோட் தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.எல்.ஏ., வீரண்ணா சரந்திமத் தயாராகி வருகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளர் என்பதால், இவருக்கு சீட் உறுதி என்று சொல்லப்படுகிறது. - நமது நிருபர் -