என்னை தாக்க காங்கிரசார் முயற்சி
பெங்களூரு: 'திரங்கா யாத்திரையின்போது என் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்த முற்பட்டனர்' என, மேல்சபை தலைவரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி புகார் மனு அளித்துள்ளார்.பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாக, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயின் பேச்சுக்கு, சலவாதி நாராயணசாமி ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசியிருந்தார். முற்றுகை
இந்நிலையில், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் 21ம் தேதி கலபுரகி மாவட்டம், சித்தாபூரில் திரங்கா யாத்திரை நடந்தது. இந்த யாத்திரையில் பங்கேற்பதற்காக சித்தாபூர் விருந்தினர் இல்லத்தில் சலவாதி நாராயணசாமி தங்கியிருந்தார்.அப்போது காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸ் தடையை மீறி, அவரை முற்றுகையிட முயற்சித்தனர்.இதுதொடர்பாக, பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியின் உதவியாளரிடம், சலவாதி நாராயணசாமி உட்பட பா.ஜ., தலைவர்கள் மனுக் கொடுத்தனர்.பின், சலவாதி நாராயணசாமி அளித்த பேட்டி:சித்தாபூரில் நான் தங்கியிருந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறிக்கொண்டு, குண்டர்கள் என்னை தாக்க முயற்சித்தனர். இதனால் ஆறு மணி நேரம் விருந்தினர் அறையில் தங்கவைக்கப்பட்டேன்.எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசார் வரவில்லை. இதனால் என் கவுரவம், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான அந்தஸ்து பாதிக்கப்பட்டது. அலட்சியம்
இச்சம்பவம் நடந்தபோது, மாவட்ட எஸ்.பி., அதுார் சீனிவாசலுக்கு போன் செய்தேன். ஆனால், அவர் என் மொபைல் போன் அழைப்பை எடுக்கவில்லை.அதுபோன்று, கூடுதல் எஸ்.பி., மகேஷ் மேகன்னனவர், துணை கமிஷனர் சங்கரகவுடா, சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர் திகடி, நடராஜா லடே, சப் - இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீ சைலா அம்பதி, திம்மையா, சந்திரகாந்த், ஸ்ரீலாதேவி உட்பட அதிகாரிகள் யாரும் அவர்களின் பணியை செய்யவில்லை. இவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.பி.,யை தவிர, மற்ற அதிகாரிகள் அங்கு இருந்தனர். எனக்கு ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தின் மீது நீல நிற பெயின்டை வீசி, சேதம் ஏற்படுத்தினர்.என்னை மிகவும் மோசமாக பேசியும், தாக்கவும் முயற்சித்து, என் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். போலீசாருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு ஏற்றபடி நடந்து கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.