உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தினமும் 50 பேருக்கு சமையல்: 72 வயது பாட்டி அசத்தல்

தினமும் 50 பேருக்கு சமையல்: 72 வயது பாட்டி அசத்தல்

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் வசிப்பவர் அஹல்யா, 72. இவர் கடந்த 50 ஆண்டுகளாக தனது வீட்டிலேயே சிறிய அளவில் சமையல் செய்து, விற்பனை செய்து வருகிறார். தற்போதும், ஒரு நாளைக்கு 40 முதல் 50 பேருக்கு உணவு தயாரித்து வருகிறார். இவர் செயற்கை நிறமிகள், பேக்கிங் சோடா போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் உணவு தயாரிக்கிறார். இதனால், இவரது உணவுகள் வீட்டில் சமைப்பது போன்ற சுவையை கொண்டவை. அதுமட்டுமின்றி, சமீபத்தில் இவர் சமையல் செய்வது குறித்து, 'யு - டியூபில்' வீடியோ வெளியானது. இதன் மூலம் அஹல்யா பாட்டி மேலும் பிரபலமானார். இவர் தயாரிக்கும் மங்களூரு போண்டா அதீத சுவையுடையது. இப்படி பல ஆண்டுகளாக அயராது தனியாளாக உழைத்து வருகிறார். இவரது சமையல் ருசிக்கு காரணமே செயற்கை நிறமிகள் சேர்க்காமல், வீட்டு முறையில் உணவு தயாரிப்பதே என பலரும் கூறுகின்றனர். இந்த வயதிலும் அயராது உழைக்கும் அஹல்யா பாட்டி கூறியதாவது: எனக்கு 10 வயதாக இருக்கும் போது என்னுடைய தாய் சுஷிலாவிடமிருந்து சமையல் செய்வது குறித்து கற்று கொண்டேன். எனது அம்மா எனக்கு சமையல் மட்டும் கற்று கொடுக்கவில்லை. மாறாக, உத்வேகம், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்தும் கற்று கொடுத்தார். சமையல் என்பது ஒரு கலை. இதை நீங்கள் நன்றாக செய்தால், பலரும் உங்களை பாராட்டுவர். எல்லோரும் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவே விரும்புகின்றனர். அதனால், என்னுடைய வீட்டு ஸ்டைல் சாப்பாட்டை சுவைக்க அனைவரும் விரும்புகின்றனர். உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் நாம் சாப்பிடும் உணவிலே உள்ளது. சுத்தமான நெய், காய்கறிகள், கலப்படமில்லாத வீட்டு முறை உணவை தயார் செய்வதால், என்னிடம் பலரும் உணவு ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். தட்டு இட்லி, மங்களூரு போண்டா, தக்காளி சட்னி, சூப் வகைகள், இனிப்பு போன்ற பல வகை உணவுகளை செய்து கொடுத்து வருகிறேன். தசரா போன்ற பண்டிகை நாட்களில் அதிகமாக உணவு ஆர்டர்கள் வருகின்றன. அனைவரும் நல்ல உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இப்படி தனது 72 வயதிலும், சிரித்த முகத்துடன் சமையல் செய் து அசத்தி வரும் அஹல்யா பாட்டியின் உழைப்புக்கு நாமும் போடலாமே ஒரு சல்யூட். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி