உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / இகோபிக்ஸ் இயந்திரம் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

இகோபிக்ஸ் இயந்திரம் பயன்படுத்த மாநகராட்சி திட்டம்

பெங்களூரு: பெங்களூரின் சாலை பள்ளங்களை மூட, 'இகோபிக்ஸ்' இயந்திரத்தை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த இயந்திரம் சில நிமிடங்களில், பள்ளங்களை மூடுகிறது.பெங்களூரில் சாலை பள்ளங்களால், வாகன பயணியர், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மாநகராட்சியும் பல விதமான முயற்சிகள் செய்து, பள்ளங்களை மூடுகிறது. ஆனால் சாதாரண மழை வந்தாலே, பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால், பள்ளங்களை மூடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.நவீன தொழில்நுட்பம் கொண்ட, 'இகோபிக்ஸ்' இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்டீல், தார், சிமென்ட், ஜல்லி கற்களை பயன்படுத்தி கஞ்சி போன்ற கலவை தயாரிக்கும் இகோபிக்ஸ் இயந்திரம், பள்ளங்களில் நிரப்பி அதை சமன்படுத்தும். இந்த இயந்திரத்தால் மூடப்பட்ட பள்ளங்கள் தரமானவை; நீண்ட காலம் உழைக்கும்.இது குறித்து, பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவதுசாலை பள்ளங்களை மூட, அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட, 'இகோபிக்ஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. பள்ளங்களில் சிமென்ட், ஜல்லி கற்கள் கலவையை கொட்டி மூடுவது மட்டுமின்றி, விரைவில் உலர்த்தும், 'ஹாட் ஏர் ப்ளோ' வசதியும் இயந்திரத்தில் உள்ளது.இந்த இயந்திரத்தை, சி.எஸ்.ஐ.ஆர்., எனும் மத்திய சாலை பழுது பார்ப்பு ஆய்வு நிறுவனம், சி.ஆர்.ஆர்.ஐ., எனும் மத்திய சாலை ஆய்வு நிறுவனம் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ளன. சாலையில் தண்ணீர் தேங்கினாலும், இந்த இயந்திரத்தால் பள்ளங்களை திறம்பட மூட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சில நிமிடங்களில் பள்ளங்களை மூடி, உலர்த்தி வாகன போக்குவரத்துக்கு வாய்ப்பளிக்கிறது.கடந்த 2024ல் சோதனை முறையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாநில நெடுஞ்சாலை 356ல், சி.ஆர்.ஆர்.ஐ., மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., ஒருங்கிணைந்து பணிகளை நடத்தின. இது வெற்றி அடைந்ததால், நகரின் மற்ற இடங்களில் சாலை பள்ளங்களை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி