கோமுல் பால் கூட்டுறவு சங்கத்தில் ஊழல் காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி புகார்
பங்கார்பேட்டை: ''கோமுல் எனும் கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்டங்கள் இணைந்த பால் கூட்டுறவுச் சங்க ஊழலை எதிர்த்து போராடுவேன்,'' என பங்கார்பேட்டை காங்., - எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி அறிவித்தார்.'கோமுல்' எனும் கோலார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநரான பின், பங்கார்பேட்டையில் நேற்று நாராயணசாமி அளித்த பேட்டி:கோமுல் இயக்குநர் தேர்தலில் பங்கார்பேட்டை தொகுதியில் என்னை தோற்கடிக்க, மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா, பா.ஜ., தலைவர்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்தார். எனக்கு எதிராக பா.ஜ., ஆதரவாளர் ஹுனுகுந்தா வெங்கடேஷை களமிறக்க சதி செய்தார்.பா.ஜ.,வின் ஹுடி குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கவுடா, ம.ஜ.த., ராமேகவுடா ஆகியோர் என் நண்பர்கள். அவர்களுடன் பேசுவதில், தப்பென்ன? ஆனால், அவர்களுடன் கைகோர்த்து அரசியல் செய்யவில்லை.'கோமுல்' எனும் கோலார் - சிக்கபல்லாபூர் மாவட்டங்கள் இணைந்த பால் கூட்டுறவுச் சங்க ஊழல் குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் முழு விபரங்களையும் அளித்துள்ளேன். விசாரணை நடத்துவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.ஊழல் நடக்கவில்லை என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ், மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா வேண்டுமானால் கூறலாம். இதை எதிர்த்து போராடுவேன். எனக்கும், மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடாவுக்கும் தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. 'கோமுல்' தலைவர் பதவியை எதிர்பார்த்தேன். இப்பதவியில் 1987ல் இருந்து இதுவரை எஸ்.சி., நபர் அமர்த்தப்படவில்லை. இது தொடர்பாக கட்சித் தலைவர்களை சந்தித்தேன்.அதனால் மல்லிகார்ஜுன் கார்கே, சித்தராமையா, சிவகுமார், பரமேஸ்வர், மஹாதேவப்பா, பிரியங் கார்கே ஆகியோரை தலைவர் பதவிக்காக பல முறை சந்தித்து கேட்டேன். அவர்கள் கேட்டுக்கொண்டதால், தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. எக்காரணம் கொண்டும், எந்த விஷயம் குறித்தும் நஞ்சே கவுடாவுடன் பேச தயாரில்லை.இவ்வாறு அவர் கூறினார்.