உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக அரசின் வீட்டு வசதி துறையில் ஊழல்! காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டால் அதிர்ச்சி

கர்நாடக அரசின் வீட்டு வசதி துறையில் ஊழல்! காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டால் அதிர்ச்சி

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகின. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதன் விளைவாக, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் பதவியை நாகேந்திரா ராஜினாமா செய்ய நேரிட்டது.

கத்தி

அதன்பின் 'முடா'வில் சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றதாக, முதல்வர் சித்தராமையா குடும்பத்தினர் மீதே குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடக்கிறது.சமீபத்தில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது, சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோன்று, அமைச்சர்கள் சிவானந்த் பாட்டீல் உட்பட, சில அமைச்சர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.நகைக்கடை மோசடி தொடர்பாக துணை முதல்வரின் தம்பியான முன்னாள் எம்.பி., சுரேஷ் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த புகார்களால் ஆளுங்கட்சி தரப்பு ஆட்டங்கண்டு வரும் நிலையில், வீட்டு வசதித்துறையில் ஊழல் நடப்பதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஒருவரே, குற்றஞ்சாட்டியிருப்பது அக்கட்சியினரை கலங்கடித்துள்ளது.

சிறை

கலபுரகி மாவட்டம், ஆளந்தா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், திட்ட ஆணையத்தின் துணை தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவர் நேற்று காலை, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் செயலர் சர்பராஜ் கானை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். இருவரின் உரையாடல் ஆடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.அதிருப்தியுடன் பேசிய பி.ஆர்.பாட்டீல், 'வீட்டு வசதித்துறையில் ஊழல் தாண்டவமாடுகிறது. பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே, வீடுகளை கொடுத்துள்ளீர்கள். சொந்த கட்சி அரசு மீது, குற்றஞ்சாட்டுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது' என்றார்.அவரை சமாதானம் செய்த சர்பராஜ் கான், 'எந்த தொகுதியில் இது போன்று நடந்துள்ளது. என்னிடம் தகவல் தாருங்கள். சம்பந்தப்பட்டவர்களை சிறையில் தள்ளுகிறேன்' என்றார்.

சிபாரிசு

இதற்கு நக்கலாக சிரித்த பி.ஆர்.பாட்டீல், 'ஆளந்தா தொகுதியின், முன்னள்ளியில் 200 வீடுகள், தர்கா சிரூரில் 100, தங்காபுராவில் 200, கவலகாவில் 200, மாடியாளாவில் 200 வீடுகளை, லஞ்சம் பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளனர். அதே போன்று, ஆளந்தாவின் பக்கத்து தொகுதியான அப்ஜல்புராவிலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு, வீடுகள் கொடுத்துள்ளனர்' என, குற்றஞ்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், 'நான் அளித்த சிபாரிசு கடிதங்களை பொருட்படுத்தவில்லை. மாறாக கிராம பஞ்சாயத்து தலைவர் கொடுத்த சிபாரிசு பட்டியலுக்கு அனுமதி அளித்துள்ளீர்கள். எம்.எல்.ஏ., அளிக்கும் கடிதத்துக்கு மதிப்பே இல்லையா?' என காட்டமாக கேள்வி எழுப்பினார்.இதற்கு சர்பராஜ்கான், 'நீங்கள் யாருடைய பெயர்களை சிபாரிசு செய்துள்ளீர்களோ, அவர்களின் பட்டியலை தாருங்கள். அவர்களுக்கு நாங்கள் வீடுகள் வழங்குவோம். லஞ்சம் பெற்று, வீடுகள் கொடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கிறோம்' என, உறுதி அளித்தார்.கோபம் தணியாத பி.ஆர்.பாட்டீல், 'நான் வாயை திறந்து, தகவல்களை பகிரங்கப்படுத்தினால், அரசின் அஸ்திவாரம் ஆட்டம் காணும்' என, எச்சரிக்கிறார்.

தர்மசங்கடம்

இந்த ஆடியோ, காங்கிரஸ் அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தன் துறையில் ஊழல் நடப்பதாக குற்றஞ்சாட்டிய பி.ஆர்.பாட்டீலுக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கண்டனம் தெரிவித்துள்ளார். 'இது தகுதிக்கு அழகல்ல' என, காட்டமாக கூறியுள்ளார்.பி.ஆர்.பாட்டீலின் குற்றச்சாட்டு, எதிர்க்கட்சியினருக்கு வலுவான அஸ்திரத்தை அளித்துள்ளது. அமைச்சர் ஜமீர் அகமது கான், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். மேலிட அளவில் செல்வாக்கு உள்ளவர். அவர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது, முதல்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., பி.ஆர்.பாட்டீல், வீட்டு வசதித்துறையில் நடந்துள்ள முறைகேட்டை, வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். அவர் தனக்கு தெரிந்த தகவல்களை பகிரங்கப்படுத்த வேண்டும். லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில், அவருக்கு தேவையான ஒத்துழைப்பை பா.ஜ., அளிக்கும்.

கிரஹணம்

சொந்த கட்சி எம்.எல்.ஏ.,வே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதால், வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு, பதவியில் நீடிக்க எந்த அருகதையும் இல்லை. உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.பி.ஆர்.பாட்டீலின் ஆடியோ உரையாடல் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்த வேண்டும்.முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், ஒரு அமைச்சராவது ஒழுங்காக பணியாற்றுகிறாரா? இது லாயக்கற்ற அரசு. கர்நாடகாவை பிடித்துள்ள கிரஹணம். கன்னடர்களை பீடித்துள்ள சாபம். இந்த அரசு ஒழியும் வரை, மக்களுக்கு நிம்மதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.நடவடிக்கை எடுப்பார்!அமைச்சர் ஜமீர் அகமது கானிடம், நேரடியாக கூறியிருந்தால், நடவடிக்கை எடுத்திருப்பார். பி.ஆர்.பாட்டீலின் குற்றச்சாட்டு குறித்து, ஊடகங்களில் கவனித்தேன். அவர் எந்த அர்த்தத்தில் அப்படி கூறினார் என்பது தெரியவில்லை. வீடுகள் கொடுக்க யார் லஞ்சம் வாங்கினார்களோ, அவர்களை பற்றி அமைச்சரிடம், பி.ஆர்.பாட்டீலிடம் புகார் அளிக்க வேண்டும். அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.- ஜி.பரமேஸ்வர், அமைச்சர், உள்துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ