மேலும் செய்திகள்
இன்ஜினியர் தற்கொலை 'ஓலா' நிறுவனர் மீது வழக்கு
21-Oct-2025
கோவிந்த்ராஜ்நகர்: நவ. 16-: நடிகையை தாக்கி தொல்லை கொடுத்த வழக்கில், பல்லாரி டஸ்கர் கிரிக்கெட் அணி உரிமையாளர் அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்டார். பெங்களூரு, ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டி, 40. ஏ.வி.ஆர்., ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர். சினிமா தயாரிப்பாளரான இவர், கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இவருக்கும், பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் வசிக்கும் 36 வயது கன்னட நடிகைக்கும், 2021ல் அறிமுகம் ஏற்பட்டது. இலங்கையில் 2022ல் நடந்த கிரிக்கெட் போட்டியை துவக்கி வைக்க, நடிகையை சிறப்பு விருந்தினராக, அரவிந்த் அழைத்துச் சென்றார். அப்போது இருந்து இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்தது. எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்றனர். தற்கொலை முயற்சி இந்நிலையில், 2023ல் நடிகையிடம் இருந்து, அரவிந்த் திடீரென விலகினார். பின், கடந்த ஆண்டு நடிகையை மீண்டும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அரவிந்த்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட நடிகை, அவருடன் முன்பு போல பழக மறுத்துவிட்டார். கோபம் அடைந்த அரவிந்த், நடிகைக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். நடிகை எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து செல்வது, அவருடைய நடமாட்டத்தை கண்காணிப்பது, திருமணம் செய்யும்படி கூறியதுடன், மறுத்தால் குடும்பத்தை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார். மனம் உடைந்த நடிகை, கடந்த ஆண்டு தன் வீட்டில் துாக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை நண்பரான சைலேஷ் என்பவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனைக்கு சென்ற அரவிந்த், நடிகையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதுடன், ஆடைகளை கிழித்ததாக கூறப்படுகிறது. அரவிந்தின் செயலால் மனம் உடைந்த நடிகை, கடந்த மாத துவக்கத்தில் ஆர்.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்ற போலீசார் விசாரிப்பதில் அலட்சியம் காட்டியதால், மகளிர் ஆணைய உதவியை நடிகை நாடினார். மகளிர் ஆணைய அழுத்தத்தின்படி, கடந்த 17ம் தேதி அரவிந்த் மீது ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும் அவரை கைது செய்யவில்லை. ஐந்து நாட்களுக்கு முன்பு, கோவிந்த்ராஜ்நகர் போலீஸ் நிலையத்துக்கு வழக்கை மாற்றி, போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உத்தரவிட்டார். விசாரணை அதிகாரியாக விஜயநகர் ஏ.சி.பி., சந்தன் நியமிக்கப்பட்டார். நோட்டீஸ் அரவிந்த்தை கைது செய்ய சந்தன் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்தது. அவர் இலங்கைக்கு சென்றது தெரிந்தது. வேறு எந்த நாட்டிற்கும் தப்பிச் செல்லாமல் இருக்க 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் பெங்களூரு வந்த அரவிந்த்தை, விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். அவரை கோவிந்த்ராஜ்நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர். தன் மீது எந்த தவறும் இல்லை என்று போலீசாரிடம் கூறிய அரவிந்த், 'என்னை ஏமாற்றி நகை, வீட்டு மனை, வீடு, கார் ஆகியவற்றை நடிகை வாங்கினார். அவருக்காக 3 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளேன்' என்றார்.
21-Oct-2025