வரமஹாலட்சுமி பண்டிகை சந்தைகளில் மக்கள் நெரிசல்
பெங்களூரு : வரமஹாலட்சுமி பண்டிகை என்பதால், பெங்களூரில் விலைவாசியும், விற்பனையும் அதிகரித்துள்ளது. சந்தைகள் களை கட்டியுள்ளன. விலை உயர்வை பொருட்படுத்தாமல், தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கின்றனர். வரமஹாலட்சுமி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் சந்தைகளில், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பெங்களூரின் மல்லேஸ்வரம், காந்தி பஜார், சிவாஜிநகர், யஷ்வந்தபூர், மடிவாளா, மாகடி சாலை, கே.ஆர்.சந்தை, கே.ஆர்.புரம் உட்பட, அனைத்து சந்தைகளிலும் மக்கள் நெரிசல் காணப்படுகிறது. பண்டிகையின் முதல் நாளில் வாங்கினால், விலை அதிகமாக இருக்கும் என்பதால் நேற்று முன் தினமும், நேற்றும் தேவையான பொருட்களை வாங்கினர். பண்டிகை என்பதால், நகரின் பல்வேறு இடங்களில் மினி சந்தைகள் உருவாகியுள்ளன. பூக்கள், பழங்களின் விலை அதிகம் இருந்தும், அதை பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். லட்சுமி தேவி முகம், லட்சுமியை அலங்காரம் செய்ய சேலை உட்பட, அனைத்தும் வாங்குகின்றனர். மழை பெய்ததால், பல இடங்களில் பூக்களின் விளைச்சல் பாழாகின. இதனால் வரத்தும் குறைந்துள்ளது. இதற்கு முன்பு கோலார், ராம்நகர், சிக்கபல்லாபூர் உட்பட, சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து, பெங்களூருக்கு மல்லிகை, ரோஜா, கனகாம்பரம், சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வந்தன. ஆனால் விளைச்சல் இல்லாததால், எதிர்பார்த்த அளவில் பூக்கள் வரவில்லை. தமிழகத்தில் இருந்து, பெங்களூருக்கு மல்லிகை பூக்கள், பெருமளவில் வந்தன. மழை பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து மற்ற பூக்கள் வரவில்லை. தேவை அதிகரித்து, வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, தசரா பண்டிகை வருவதால், பூக்களின் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.