உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்கள் பிரதிநிதிகளுக்கு செக் லோக் ஆயுக்தா நீதிபதி விளக்கம்

மக்கள் பிரதிநிதிகளுக்கு செக் லோக் ஆயுக்தா நீதிபதி விளக்கம்

பெங்களூரு: ''சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத மக்கள் பிரதிநிதிகள் குறித்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்,'' என, லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் தெரிவித்தார். கர்நாடகாவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆண்டுதோறும் ஜூன் 30ம் தேதிக்குள் அவர்களின் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று லோக் ஆயுக்தா உத்தரவிட்டிருந்தது. ஆனால், தாக்கல் செய்யாத 5 அமைச்சர்கள், 67 எம்.எல்.ஏ.,க்கள், 28 எம்.எல்.சி.,க்களின் பெயர்களை, சில நாட்களுக்கு முன்பு, லோக் ஆயுக்தா அறிவித்திருந்தது. இதில், காங்கிரசின் 44 எம்.எல்.ஏ.,க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.சி., ரமேஷ் பாபு, 'மக்கள் பிரதிநிதிகள் போன்று, கர்நாடக லோக் ஆயுக்தா, உப லோக் ஆயுக்தா, அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களும் தங்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வைக்கும் வகையில், சட்டசபை கூட்டத்தொடரின்போது, சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசு, சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கூறியதாவது: சொத்து விபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக ஒரு பிரதிநிதியை தண்டிக்க எந்த விதியும் இல்லை. இதனால், மக்கள் பிரதிநிதிகள், அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இவ்விஷயத்தை சட்டப்பூர்வமாக தொடர லோக் ஆயுக்தாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதேவேளையில், லோக் ஆயுக்தா சட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் மீறியதாக, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 199 அல்லது 200ன் கீழ், தனிப்பட்ட புகார் பதிவு செய்யப்பட்டால், சொத்து விபரங்களை வழங்க தவறும் உறுப்பினர்கள் மீது, லோக் ஆயுக்தா போலீசார் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை