தலித் முதல்வர் குறித்து 2028ல் ஆலோசிக்கலாம்
கலபுரகி:''ஓராண்டாக மாநிலத்தில், தலித் முதல்வர் கூக்குரல் நின்றுள்ளது. 2028ல் சட்டசபை தேர்தல் நடக்கும் போது பார்த்து கொள்ளலாம்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தற்போதைக்கு தலித் முதல்வர் வேண்டும் என்ற வலியுறுத்தல் எழவில்லை. 2028ல் இதை பற்றி தீவிரமாக ஆலோசிக்கலாம். நவம்பரில் முதல்வர் மாற்றம் நடக்கும் என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கூறியுள்ளார். அவர் கூறியதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை.எங்கள் கட்சியினர் ஏதாவது கூறியிருந்தால், அதற்கு பதில் அளிக்கலாம். விஸ்வநாத் என்ன சொன்னாலும், அதில் எங்களுக்கு தொடர்பு இல்லை. வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என, இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளிலும், இதையேதான் சொல்வர். வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தில் வளர்ச்சி தடைபடவில்லை. பசவராஜ் பொம்மை அரசில், துறைகளுக்கு நிதியுதவி வழங்கவில்லை. எங்கள் அரசு வந்த பின், அனைத்து துறைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு, நாம் 2 லட்சம் கோடி ரூபாய் வரித்தொகை செலுத்துகிறோம். இதில் பாதியளவு தொகையும் நமக்கு திரும்ப கிடைப்பது இல்லை. தற்போது 36,000 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. நமது வரிப்பணத்தை யமுனா, கங்கா தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு பயன்படுத்துகின்றனர். நமது பணத்தில் உத்தரபிரதேசம், பீஹார் மாநிலங்களில் சாலைகள் அமைக்கப்படுகின்றன.