மைசூரு தசரா விழாவில் தலித் அமைச்சர்கள் அவமதிப்பு?
மைசூரு: மைசூரு தசரா விழாவில் தலித் அமைச்சர்களை, எஸ்.பி., அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, தலைமை செயலருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மைசூரு தசராவின் ஜம்பு சவாரி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இதை துவங்கி வைக்கும் முன், அரண்மனை வளாகத்தில் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன் உள்ள நந்தி துாணுக்கு, முதல்வர் சிவகுமார் பூஜை செய்தார். முன்னதாக முதல்வர் பூஜை செய்ய வந்த போது, அமைச்சர்கள் யதீந்திரா, நரேந்திரசாமி, பசவந்தப்பா, சிவராஜ் தங்கடகி ஆகியோரும் உடன் வந்தனர். பூஜை நடத்த வேண்டிய இடத்திற்குள் முதல்வரும், யதீந்திராவும் சென்று விட்டனர். மற்ற மூன்று அமைச்சர்களையும், மைசூரு எஸ்.பி., ரிஷ்யந்த் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். முதல்வர் கூறியதால், அந்த மூன்று அமைச்சர்களும் பூஜை நடந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.,க்கு, அமைச்சர்களை கூட தெரியவில்லையா என்றும் கண்டனம் எழுந்தது. எஸ்.பி.,யால் நிறுத்தப்பட்ட அமைச்சர்கள் மூன்று பேரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்; வேண்டுமென்றே அவர்கள் அவமதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய, தலைமை செயலர் ஷாலினிக்கு, முதல்வர் நேற்று உத்தரவிட்டார். மைசூரு மாவட்ட எஸ்.பி.,யாக ரிஷ்யந்த் இருந்தாலும், மைசூரு நகரம் போலீஸ் கமிஷனராக உள்ள சீமா லட்கர் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பை காரணம் காட்டி, பூஜை நடந்த இடத்திற்கு, முதல்வரையும், அமைச்சர் யதீந்திராவையும் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று, சீமா லட்கர், சக போலீஸ் அதிகாரிகளிடம் கூறி உள்ளார். இதை கருதியே, மூன்று அமைச்சர்களையும், ரிஷ்யந்த் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் தலைமை செயலர் என்ன அறிக்கை அளிக்க உள்ளார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமைச்சர்களை, எஸ்.பி., வேண்டுமென்றே தடுக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களாக மட்டுமே அப்படி செய்தார் என்று, துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் காதர், பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் கூறியுள்ளனர். அரசியல் செய்ய வேண்டாம் என்றும், எதிர்க்கட்சிகளை கேட்டுள்ளனர். எஸ்.பி., ரிஷ்யந்த், பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., – எம்.எல்.ஏ., முனிரத்னாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சயாஜி ராவ் ரோடு பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தடுக்க, போலீசார் தடியடி நடத்தினர். இதில் பெற்றோருடன் நின்று ஜம்பு சவாரியை வேடிக்கை பார்த்த சிசிரா, 4, என்ற குழந்தை, தலையில் தடியடி விழுந்து, காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, தலையில் தையல் போடப்பட்டு, ஐ.சி.யு.,வில் வைத்து கண்காணிக்கப்படுகிறது.