தர்ஷனுக்கு சிறையில் சலுகை அதிகாரிகளிடம் விசாரிக்க அனுமதி
பெங்களூரு: சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33 கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.ரவுடிகள் வில்சன் கார்டன் நாகா, குல்லா சீனாவுடன் சேர்ந்து தர்ஷன் காபி குடித்து, சிகரெட் புகைக்கும் புகைப்படம் வெளியானது.மேலும், சிறையில் இருந்தபடியே ரசிகர் ஒருவருடன் மொபைல் போனில் வீடியோகால் பேசும் புகைப்படமும் வெளியானது. இதன்மூலம் அவருக்கு சிறையில் ராஜ உபசாரம் கிடைப்பது தெரிந்தது. பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.சிறை அதிகாரிகள் தர்ஷனிடம் பணம் வாங்கி கொண்டு, ராஜ உபசாரம் செய்து கொடுத்ததாக சிறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து சிறையின் தலைமை சூப்பிரண்டு சேஷமூர்த்தி, சிறை சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் சாமி, ஜெயிலர்கள் சரணபசப்பா, பிரபு, உதவி ஜெயிலர்கள் திப்பேசாமி, ஸ்ரீகாந்த், வார்டன்கள் வெங்கப்பா, சம்பத்குமார், பசப்பா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.சிறையில் மொபைல் போன் பயன்படுத்துவது, தர்ஷனுக்கு ராஜ உபசாரம் கிடைத்தது பற்றி விசாரிக்க, எலக்ட்ரானிக் சிட்டி உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் இரண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டது.ஒரு குழுவினர் ரவுடிகள், தர்ஷனிடம் விசாரித்து தகவல் பெற்றனர். சிறை அதிகாரிகளிடம் விசாரிக்க இன்னொரு குழு அமைக்கப்பட்டது.ஆனால் அவர்களிடம் விசாரிக்க, கர்நாடக உள்துறை அனுமதி தேவைப்பட்டது. அனுமதி கேட்டு சிறை துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, உள்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.இந்நிலையில் சம்பவம் நடந்து ஏழு மாதங்களுக்கு பின், சிறை அதிகாரிகளிடம் விசாரிக்க தற்போது உள்துறை அனுமதி வழங்கி உள்ளது.