தர்ஷன் சிறை மாற்றம்? 23ல் விசாரணை
பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனை, பல்லாரி சிறைக்கு மாற்றக்கோரும் மனு மீதான விசாரணை, வரும் 23ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட ஏழு பேர் ஜாமினில் இருந்தனர். கடந்த வாரம், இவர்களின் ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து ஏழு பேரும் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசு தரப்பு சிறப்பு வக்கீல் பிரசன்ன குமார், 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேர், ஜாமின் பெறுவதற்கு முன்பு, மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது ஜாமின் ரத்தாகி உள்ளதால், ஏழு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். எனவே, ஜாமின் பெறுதற்கு முன், பல்லாரி சிறையில் தர்ஷன்; ஷிவமொக்கா சிறையில் ஜெகதீஷ், லட்சுமண்; கலபுரகி சிறையில் நாகராஜ்; பெலகாவி சிறையில் பிரதோஷ்; பெங்களூரு சிறையில் பவித்ரா கவுடா, அனுகுமார் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிக்காக, அவர்களை மீண்டும் அந்தந்த சிறைக்கே அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இம்மனு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக தர்ஷன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.