தடையின்றி குடிநீர் வழங்கல் தாவணகெரே முதலிடம்
தாவணகெரே ':கர்நாடகாவில் 24 மணி நேரமும் தண்ணீர் சேவை வழங்கும் 92 கிராமங்களில், 51 கிராமங்கள் தாவணகெரே மாவட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள கிராமங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு 2019ல் 'ஜல் ஜீவன்' திட்டத்தை அமல்படுத்தியது. இதில், மாநில அரசுக்கும் பங்கு உண்டு. இத்திட்டத்தின் மூலம், கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும். இது குறித்து, மாநில அரசு சமீபத்தில் ஒரு கண க்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில், கர்நாடகாவில் உள்ள 92 கிராமங்களில் த ங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், தாவணகெரேவில் மட்டுமே 51 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்து உள்ளது. தாவணகெரே மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி கிட்டே மாதவ் விட்டல்ராவ் கூறியதாவது: தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்வதில், குடிநீர் வாரிய அதிகாரிகளின் பங்கு இன்றியமையாதது. முன்பு குடிநீர் வினியோகம் ஒரு நாளைக்கு சில மணி நேரம் மட்டுமே செய்யப்பட்டது. அப்போது, தண்ணீரை அனைவரும் அளவுக்கு மீறி சேமித்து வைத்தனர். இந்த தண்ணீரை அடுத்த நாள் ஊற்றிவிட்டு, மீண்டும் தண்ணீரை சேமித்தனர். இதனால் தண்ணீர் வீணாகியது. தற்போது, 24 மணி நேரமும் தண்ணீர் வழங்கப்படுவதால், தண்ணீரை மக்கள் வீணாக்குவது கணிசமாக குறைந்து உள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள் மாவட்டத்தில் 100 கிராமங்களில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.