உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வகுப்புவாத வன்முறை தடுப்பு குழு அமைக்க முடிவு!: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவிப்பு

வகுப்புவாத வன்முறை தடுப்பு குழு அமைக்க முடிவு!: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவிப்பு

மங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி கொலை எதிரொலியாக, கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி உள்ளது. “இவ்விரு மாவட்டங்களிலும் வகுப்புவாத வன்முறை தடுப்புக் குழுக்கள் விரைவில் அமைக்கப்படும்,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அறிவித்துள்ளார்.கர்நாடகா - கேரள மாநில எல்லையில் கடலோரப் பகுதியில் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்கள் உள்ளன. கல்வியில் சிறந்து விளங்கும் இந்த மாவட்டங்களில், கடந்த சில ஆண்டுகளாக வகுப்புவாத வன்முறைகளும் அவ்வப்போது நடக்கின்றன.கடந்த 2022 ஜூலையில் சுள்ளியாவின் பெல்லாரேயைச் சேர்ந்த பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக சூரத்கல்லின் முகமது பாசில் அதே மாதத்தில் கொல்லப்பட்டார்.கேரளாவின் முகமது அஷ்ரப் கடந்த மாதம் 27ம் தேதி மங்களூரில் கொலை செய்யப்பட்டார். பாசில் கொலையில் தொடர்புடைய பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டி, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பின் கடந்த 1ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த நான்கு கொலைகளால், தட்சிண கன்னடா மக்கள் எப்போதுமே பதற்றத்தில் உள்ளனர். சுஹாஸ் கொலை செய்யப்பட்ட அன்றே, உடுப்பி மாவட்டம், ஹிரியடுக்காவில் வேறு மத வாலிபர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.இதனால் இந்த இரண்டு மாவட்டங்களிலும், மீண்டும் அமைதியை கொண்டு வரும் நோக்கில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் நேற்று மங்களூரு சென்றனர்.சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, மேற்கு மண்டல ஐ.ஜி., அமித் சிங், மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால், தட்சிண கன்னடா கலெக்டர் முல்லை முகிலன், எஸ்.பி., யத்தீஷ் ஆகியோருடன் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது பற்றி இருவரும் ஆலோசனை நடத்தினர்.

ஒருவித பயம்

பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி:தட்சிண கன்னடாவில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் ஒரு வித பயத்தில் உள்ளனர். தட்சிண கன்னடா, உடுப்பியில் அமைதியை நிலைநாட்ட அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.இந்த இரு மாவட்டங்களிலும் வகுப்புவாத வன்முறையை தடுக்கும் வகையில் விரைவில் குழு அமைக்கப்படும். நக்சல் ஒழிப்புப் படை போன்று இந்த குழுவும் உருவாக்கப்படும்.வகுப்புவாத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது இந்த குழு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். குழுவுக்கு நாங்கள் முழு அதிகாரம் வழங்குவோம்.சுஹாஸ் கொலைக்கு பின், தட்சிண கன்னடாவில் வகுப்புவாத வன்முறை மீண்டும் நடந்து இருப்பதாக மக்கள் நினைக்கலாம். வன்முறையை மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். இங்குள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும்.கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த அஷ்ரப், மங்களூரில் கொல்லப்பட்டதும்; சுஹாஸ் கொலையும் நல்லிணக்கத்திற்கு சவாலாக மாறி உள்ளன.

மகிழ்ச்சி

சுஹாஸ் கொலை வழக்கில் எட்டு பேர்; அஷ்ரப் கொலையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகங்கள் இடையே பிரச்னையை துாண்டும் வகையில் பேசுபவர்கள், சமூக வலை தளங்களில் கருத்து வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நானும், தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு அமைச்சர் தினேஷ் குண்டுராவும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம்.எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மற்ற மாவட்டங்களிலும் வகுப்புவாத வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைப்பது பற்றி பரிசீலிப்போம். மாநிலத்தில் தற்போது நக்சல் நடவடிக்கை இல்லாததால், நாங்கள் நக்சல் ஒழிப்புக் குழுவை கலைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை