குடிநீர் கசிவை தடுக்க ஏ.ஐ., பயன்படுத்த முடிவு
பெங்களூரு: குடிநீர் கசிவால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க, ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் முடிவு செய்து உள்ளது. குடிநீர் கசிவால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்து உள்ளது. இதற்காக, 'ஸ்மார்ட் டெர்ரா, சோலினாஸ், வில்க்ரோ, டைட்டன்' ஆகிய தனியார் நிறுவனங்களுடன் குடிநீர் வாரியம் நேற்று ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்து, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா கூறியதாவது : நீர் கசிவு, குழாய் பழுது, நீர் மாசுபாடு ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிநவீன ரோபோட்டிக் கருவிகள் பைப் லைன்களுக்குள் சென்று ஆய்வு செய்யும். இவை நீர் கசிவு, குழாய்களில் சேதம் ஏதேனும் இருந்தால், உடனடியாக கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இதன் மூலம் நீர் வீணாவது தவிர்க்கப்படும். இது, பெங்களூரின் தெற்கு பகுதியில் ஒன்றரை ஆண்டு காலம் சோதனை திட்டமாக செயல்படுத்தப்படும். இதன் மூலம் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிய முடியும். டைட்டன் நிறுவனத்தின் நிதியுதவியுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெல்லந்துாரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும். தொழிலாளர்கள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படாது. பெங்களூரில் குடிநீர் பற்றாக்குறை எதுவுமில்லை. பருவமழை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும், அவசர நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நடமாடும் காவிரி டேங்கர்கள், ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பெங்களூருக்கு மாதந்தோறும் 2 முதல், 2.3 டி.எம்.சி., காவிரி நீர் தேவைப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.