உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / என்.ஆர்.ஐ., மாணவர் இட ஒதுக்கீடு ஜனநாயக சங்கத்தினர் போராட்டம்

என்.ஆர்.ஐ., மாணவர் இட ஒதுக்கீடு ஜனநாயக சங்கத்தினர் போராட்டம்

பெங்களூரு: அரசு மருத்துவ கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து, அனைத்திந்திய மாணவ ஜனநாயக சங்கத்தினர் நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., எனும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு சமீபத்தில் வழங்கப்பட்டது. என்.ஆர்.ஐ., மாணவர்களிடமிருந்து ஒரு சீட்டுக்கு 25 லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, மருத்துவ கல்வி, திறன் மேம்பாட்டு அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் அறிவித்திருந்தார். இதற்கு ஏ.ஐ.டி.எஸ்.ஓ., எனும் அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்தினர். அமைப்பின் மாநில பொருளாளர் சுபாஷ் கூறியதாவது: மருத்துவ தொழில் என்பது சமூகத்திற்கு சேவை செய்வதாகும். துன்பத்தில் இருப்போருக்கு நிவாரணம் வழங்குவதாகும். அரசு மருத்துவ கல்லுாரிகளில் படிப்பதற்கு என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறாது. பணக்கார மாணவர்கள் எளிதில் மருத்துவர் ஆகலாம். பல லட்சம் ரூபாய் செலவு செய்து படித்தவர்கள், மருத்துவர் ஆனதும் அந்த தொகையை வசூலிப்பதையே நோக்கமாக வைத்து செயல்படுவர். இதன் மூலம் நல்ல மருத்துவர்களை உருவாக்க முடியாது. மாறாக வெள்ளை கோட் அணிந்த வணிகர்களையே உருவாக்க முடியும். அரசின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ