உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 48 சதவீதம் குறைந்தது டெங்கு பாதிப்பு

48 சதவீதம் குறைந்தது டெங்கு பாதிப்பு

பெங்களூரு: மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஊழியர்கள், அதிகாரிகளின் முயற்சியால், இந்த ஆண்டு பெங்களூரில் டெங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 48 சதவீதம் குறைந்துள்ளது.பெங்களூரில் நடப்பாண்டின் துவக்கம் முதலே, டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதில் மாநகராட்சியின் சுகாதார பிரிவு அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரம் காண்பித்தனர். நகரின் எட்டு மண்டலங்களில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று கொசு மருந்து தெளிப்பது, கழிவுநீர் தேங்கிய பகுதிகளை சுத்தம் செய்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

நியமனம்

இதுமட்டுமின்றி, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 240 சுகாதார ஆய்வாளர்கள், 700 தன்னார்வலர்களை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நியமித்தார்.இதுபோன்ற நடவடிக்கைகளால், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த ஆண்டு, ஜனவரி 1 முதல் ஜூன் 4ம் தேதி வரை, 1,712 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதுவே நடப்பாண்டு, ஜனவரி 1 முதல் ஜூன் 4ம் தேதி வரை, 824 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 48 சதவீதம் குறைவு' என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரம் சிறப்பு கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர் கூறுகையில், ''ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கான பலன் கிடைத்துள்ளது. வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மழை பெய்யும்போது, விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லுாரிகளில் டெங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வரும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும்.டாக்டர் ரவீந்திர மேட்டி,மாவட்ட சுகாதார அதிகாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !