விவசாயிகள் நிலத்தை எடுக்க தேவகவுடா கடும் எதிர்ப்பு
பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், டவுன் ஷிப் அமைக்க, பிடதி அருகில் விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு, தேவகவுடா எழுதிய கடிதம்:ராம்நகர் மாவட்டம், பிடதி பேரூராட்சியில், கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் சார்பில், டவுன் ஷிப் அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிடதியின், பைரமங்களா, கஞ்சுகாரனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, 24 கிராமங்களில் 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.ராம்நகர் மாவட்டத்தின், கனகபுரா, ராம்நகர் தாலுகாக்களில் ஏற்கனவே விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தை, மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. ராம்நகர் மாவட்டம், பெங்களூரு நகரை ஒட்டியுள்ளது. ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.மிச்சமுள்ள விவசாய நிலத்தில், விவசாயிகள் தங்களின் வாழ்க்கை நிர்வகிப்புக்கு, பால் உற்பத்தி, பட்டு, தோட்ட உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள பலரும் சிறிய, மிகச்சிறிய விவசாயிகள் ஆவர். ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் நிலத்திலும், அதை சுற்றிலும் மரங்கள், செடிகள் வளர்த்துள்ளனர்.இத்தகைய நிலங்களை டவுன் ஷிப் திட்டத்துக்கு கையகப்படுத்தினால், சுற்றுச்சூழல் பாழாகும். ஆயிரக்கணக்கான ஏழை விவசாய குடும்பங்களின் இளைஞர்கள், வீதிக்கு வரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கர்நாடக ஹவுசிங் போர்டு உட்பட அரசு வாரியங்கள், ராம்நகர் மாவட்டத்தின் பிடதியை சுற்றிலும், குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இதற்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தியுள்ளனர்.இதை மனதில் கொண்டு, தற்போது கிரேட்டர் பெங்களூரு ஆணையம் சார்பில் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் எண்ணத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.