உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மத்தின் தலைவன் தர்மஸ்தலா மஞ்சுநாதர்

தர்மத்தின் தலைவன் தர்மஸ்தலா மஞ்சுநாதர்

கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா என்ற ஊரில் மஞ்சுநாதர் கோவில் அமைந்து உள்ளது. தர்மஸ்தலா என்பதற்கு தர்மம் செய்யும் இடம் என பொருள். இந்த கோவில், தென் மாநிலங்களில் உள்ள ஹிந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்களில் ஒன்றாகும். இங்கு மஞ்சுநாதா சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். கோவில் வளாகத்தின் மண்ணை மிதித்தாலே மோட்சம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேத்ராவதி நதியில் புனித நீராடு வதை, ஹிந்துக்கள் வாழ்நாள் லட்சியமாக கொள்வர். கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு, 'குடுமா' என்றழைக்கப்பட்ட அப்போதைய தர்மஸ்தலாவில், ஹெக்டே குடும்பத்தை சேர்ந்த பிர்மன்னா பெர்கடேவும் அவரது மனைவி அம்மு பல்லால்தியும், 'நெல்யாடி பீடு' என்ற வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சமண மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வீடு தேடி வரும் அனைத்து மதத்தினருக்கும் உணவு அளிக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களின் இந்த சேவையை பாராட்டி, நான்கு வன தேவதைகள் பிர்மன்னா பெர்கடேவின் கனவில் தோன்றின. அப்போது, தர்மத்தை நிலை நாட்ட, சிவபெருமானின் அவதாரமான மஞ்சுநாதருக்கென ஒரு கோவிலை கட்ட வேண்டும் என கட்டளையிட்டனர். இதனால், சமண மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், மஞ்சுநாதருக்கு என, கி.பி., 1200ல் கோவிலை கட்டினார். தர்மஸ்தலாவில் உள்ள சிவலிங்கம் சுயம்பாக உருவானது. இதன் பின்னரே, மங்களூரில் உள்ள கத்ரி மஞ்சுநாதா கோவிலில் இருந்து சிவலிங்கம் கொண்டு வரப்பட்டு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இருப்பினும், சுயம்பு சிவலிங்கமும் இன்றும் கோவிலில் உள்ளது. மத நல்லிணக்கம் சிவலிங்கத்துக்கு பூஜை செய்வோர் வைணவ பூஜாரிகள்; கோவிலை நிர்வகிப்பதோ சமண மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவை அனைத்தும், மத நல்லிணகத்தை எடுத்து உரைக்கின்றன. இப்படி பல நுாறு ஆண்டு காலமாக, ஹெக்டே குடும்பத்தினர் பாரம்பரியமாக கோவிலை நிர்வகித்து வருகின்றனர். தற்போது, கோவிலை வீரேந்திர ஹெக்டே நிர்வகித்து வருகிறார். இவர், நியமன ராஜ்யசபா எம்.பி.,யாவார். கோவிலின் 21வது பரம்பரை நிர்வாகியாக, அக்டோபர் 24, 1968ல் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றில் இருந்து, இன்று வரை கோவிலை சிறப்பாக நடத்தி வருகிறார். அன்னதானம் இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். மஹாசிவராத்திரி போன்ற பண்டிகை நாட்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர் . இங்கு வரும் சிலர் தங்கள் உயிர் தர்மஸ்தலாவிலே பிரிய வேண்டும் என விரும்புகின்றனர். இங்கு இறந்தால், மோட்சத்திற்கு போவோம் என நம்புகின்றனர். இது மட்டுமின்றி, தர்மஸ்தலாவிற்கு வருவோர் அனைவரும் உணவு உண்ணாமல் செல்லக்கூடாது என்பது நடைமுறை. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் அன்னதானம் வழங்குகிறது. இதற்காக, 'அன்னபூர்ணா கிச்சன்' எனும் பிரமாண்டமான, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய சமையற்கூடம் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள கோவில்களில் இயங்கும் பெரிய அளவிலான சமையல் கூடங்களில் ஒன்றாகும். இங்கு ஒரு நாளைக்கு 30, 000 முதல் 70,000 பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. இங்கு, வந்தோரை வெறும் வயிறுடன் அனுப்பாமல், உணவு வழங்குகிறது கோவில் நிர்வாகம். இலைகளில் உணவு பரிமாறப்படுகிறது. இயற்கைக்கு கேடு விளைவிக்காத வகையில் குப்பைகள் அகற்றப்படுகின்றன. சேவைகள் ஹெக்டே குடும்பம் ஏழை, எளியோருக்கு பல வகையில் சேவைகளை செய்வதற்காக, எஸ்.டி.எம்., எனும் 'ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா எனும் அறக்கட்டளை'யை நடத்துகிறது. தேசிய அளவில் அதீத நற்பெயரை சம்பாதித்த, அறக்கட்டளைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த அறக்கட்டளை நடத்தும் உஜ்ரேவில் உள்ள எஸ்.டி.எம்., மருத்துவமனையில், ஜாதி, மத பாகுபாடின்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. நுாறு படுக்கை வசதியுடன், அதிநவீன மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கிலானோர் பயன் பெறுகின்றனர். இங்கு மருந்து, டாக்டர் கட்டணம் என எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. அதே சமயம், இங்கு பெரிய அளவிலான ஆப்பரேஷன்கள் நடத்தப்படுவதில்லை. மொபைல் ஹாஸ்பிட்டல் மேலும், மொபைல் ஹாஸ்பிட்டல் சர்வீஸ் மூலம் வாகனங்களில், கிராமங்களுக்கு சென்று இலவச சிகிச்சை, மருந்துகள் வழங்குகின்றனர். மங்களூரு கண் மருத்துவமனை, தார்வாட்டில் பல் மருத்துவமனை, எஸ்.டி.எம்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, பெங்களூரில் இயற்கை உடல்நல நிலையம் ஆகியவற்றில் மானிய விலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கல்வி இங்கு வசூலிக்கப்படும் கட்டணம், மற்ற மருத்துவ நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு. இது ஒரு லாபமின்றி இயங்கும், மருத்துவ சேவை நிறுவனமாகும். எ ஸ்.டி.எம்., அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லுாரிகள் என, மாநிலத்தின் பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலை எற்படுத்தி தருவதற்காக உஜ்ரேவில் பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது. இதுவரை, இங்கு 4.40 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வேலையிலும் உள்ளனர். இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டுமின்றி, கிராமங்களின் வளர்ச்சி, மதம் சார்ந்த போதனைகள், கோவில் கட்டடக் கலை, ஏழை மக்களுக்கு இலவச திருமணம், வரதட்சணை கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு. யோகா, பெண்கள் முன்னேற்றம், தொழில் முனைவோர் என பல முன்னெடுப்புகளை அறக்கட்டளை எடுத்து வருகிறது. இந்த எண்ணிக்கை மிக நீண்டது. இது போன்று மக்கள் பணியில் அசராமல், அறக்கட்டளை செயல்பட் டு வருகிறது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை