உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜி.எஸ்.டி., அறிவிப்பால் பதற்றம் வேண்டாம் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வணிகவரி துறை அட்வைஸ்

ஜி.எஸ்.டி., அறிவிப்பால் பதற்றம் வேண்டாம் அதிகாரிகளுடன் ஆலோசிக்க வணிகவரி துறை அட்வைஸ்

பெங்களூரு : ''ஜி.எஸ்.டி., அறிவிப்பால், வணிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, அபராத தொகையை அப்படியே செலுத்த வேண்டிய அவசியமில்லை. வணிகர்கள் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். வியாபாரிகள் செய்யும் வியாபாரத்தை பொறுத்து வரி நிர்ணயிக்கப்படும்,'' என, மாநில வணிக வரித்துறை இணை கமிஷனர் மீரா பண்டிட் தெரிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள பால், பேக்கரி, ஜூஸ், சிகரெட் உள்ளிட்ட சிறு கடைகளின் உரிமையாளர்களுக்கு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகள் மூலம் பெறப்பட்ட தொகையை கணக்கிட்டு, மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி., செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கினர். பலருக்கும் லட்சக்கணக்கில் வரி விதித்தனர். ஆர்ப்பாட்டம் இதை கண்டித்து, மாநிலம் முழுதும் உள்ள சிறு வணிகர்கள், தங்கள் கடைகளை இன்று முதல் அடைப்பது, 25ம் தேதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, முடிவு செய்துள்ளனர். இதை கேட்டு அதிர்ந்த வணிகவரித்துறை அதிகாரிகள், 'ஜி.எஸ்.டி., பற்றி அறிந்து கொள்ளுங்கள்' எனும் தலைப்பில், வணிகர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக விளக்க கூட்டம் நடத்தினர். நேற்று பெங்களூரு கோரமங்களாவில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாநில வணிக வரித்துறை இணை கமிஷனர் மீரா பண்டிட் பேசியதாவது: கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் செய்தவர்களுக்கு மட்டுமே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., அறிவிப்பால், வணிகர்கள் பதற்றம் அடைய வேண்டாம். நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை, அபராத தொகையை அப்படியே செலுத்த வேண்டிய அவசியமில்லை. வணிகர்கள் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். வியாபாரிகள் செய்யும் வியாபாரத்தை பொறுத்து வரி நிர்ணயிக்கப்படும்.பால், பழம், காய்கறி உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கப்படாது. சிகரெட், குட்கா பொருட்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும். விற்பனை செய்யும் பொருட்களை பொறுத்தே வரி முடிவு செய்யப்படும். வணிகர்கள் தங்கள் கடைகளில் இருந்து, கியூ.ஆர்., ஸ்கேனர்களை அகற்றுவதால், எந்த வித பயனுமில்லை. பதிவு இலவசம் போன் பே, பேடிஎம் செயலிகளிலிருந்து ஏற்கனவே போதுமான தகவல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. ஜி.எஸ்.டி., பதிவு செய்து கொள்வது முற்றிலும் இலவசம். ரியல் எஸ்டேட் செய்யும் நிறுவனங்களுக்கும் விரைவில் ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கருவூலத்தை நிரப்ப திட்டம் ஜி.எஸ்.டி., விதிப்பால் வணிகர்கள் பீதி அடைந்துள்ளனர். இது முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின் பேரிலேயே நடக்கிறது. தங்கள் கடைகளை மூடிவிட்டு, வணிகர்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். தன் கருவூலத்தை நிரப்ப, மாநில அரசு ஜி.எஸ்.டி., விதித்து வருகிறது. கருவூலத்தை நிரப்ப வணிகர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக, கஜானா காலி ஆகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஜி.எஸ்.டி., குறித்த நோட்டீஸ்களை திரும்பப் பெற வேண்டும். சி.டி.ரவி, எம்.எல்.சி., - பா.ஜ.,

கடைகள் மூடப்படாது; பால் பூத்கள் இயங்காது

கர்நாடகா மாநில தொழிலாளர் கவுன்சில் தலைவர் ரவிஷெட்டி பைந்துார் நேற்று கூறியதாவது: கே.ஆர்., மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகளின் கடைகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, 25ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டோம். சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.டி., நோட்டீஸ் ரத்து செய்யப்பட வேண்டும். எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மாநிலம் முழுதும் இன்றும், நாளையும் பால் சார்ந்த பொருட்கள் விற்கப்படாது. பேக்கரி, டீ, காபி கடைகள் திறந்திருக்கும். ஆனால் டீ, காபி விற்பனை செய்யப்படாது. தேவைப்பட்டால் 'பிளாக் டீ' எனும் பால் சேர்க்காத டீ, காபி விற்கலாம். மேலும் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட மாட்டாது. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வியாபாரிகள் கையில் கருப்பு பட்டை அணிந்திருப்பர். 25ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளை அடைத்து விட்டு, குடும்பத்துடன் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். ஆர்ப்பாட்டம் 100 சதவீதம் வெற்றி அடையும். மாநிலம் முழுதும் உள்ள வணிகர்கள் ஆதரவு வணிக வரித் துறை நோட்டீஸ் கொடுத்திருப்பதால், அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது பால் விற்பனையாளர்கள் தான். பால் பூத்துகளுக்கு வந்து பால் பாக்கெட் வாங்கி செல்பவர்கள், கையில் பணம் எடுத்து வருவது இல்லை. கியூ.ஆர் கோடில் ஸ்கேன் செய்து, பால் வாங்கிச் செல்கின்றனர். வணிக வரித்துறையினர் நான்கு ஆண்டுகள் நடந்த பணப்பரிமாற்றம் குறித்து கணக்கு கேட்கின்றனர். எங்கிருந்து கொடுப்பது; பால் விற்பனை செய்பவர்களுக்கே அதிக அநீதி நடக்கிறது. இரண்டு நாட்களும் தனியார் பால் பூத் இயங்காது. அரசு நடத்தும் பால் பூத்கள் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ