உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் 16 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் 16 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

பெங்களூரு: வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், அணைகள் வற்றுகின்றன. கர்நாடகாவின் 16 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை அதிகரித்துள்ளது.பெங்களூரிலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னை கடுமையாகி உள்ளது. தேவைக்கு தக்கபடி குடிநீர் சப்ளை செய்வது, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு பெரும் தலைவலியாக உள்ளது.கோடைக்காலம் என்பதால், பெங்களூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வட மாவட்டங்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களிலும் அணைகளின் நீர் மட்டம் குறைந்துள்ளது. நகரப்பகுதிகள், கிராமங்களில் குடிநீர் பிரச்னை அதிகரிக்கிறது.வட மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள், குடிநீருக்கு போர்வெல்களை மட்டுமே நம்பியுள்ளனர். வெப்பத்தின் தாக்கத்தால் இவைகள் வற்றுகின்றன. மக்கள் குடிநீருக்காக கி.மீ., கணக்கில் அலைந்து திரியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வற்றும் அணைகள்

கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், ஏரிகள், அணைகள் நிரம்பின. எனவே நடப்பாண்டு ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை, குடிநீருக்கு பிரச்னை ஏற்படவில்லை. ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், அணைகள், ஏரிகள் வற்றுகின்றன.மாநில அரசும் குடிநீர் பிரச்னை உள்ள இடங்களில், போர்வெல் தோண்டுவது, டேங்கர் மூலமாக குடிநீர் வினியோகிப்பது உட்பட, பலவிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.வாக்குறுதி திட்டங்களுடன், குடிநீர் வசதி செய்வதற்கும் பெருமளவில் பணம் தேவைப்படுவதால், பொருளாதார சுமையால் அரசு தத்தளிக்கிறது.தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, பெங்களூரு நகர், கலபுரகி, யாத்கிர், கொப்பால், தார்வாட், பாகல்கோட், விஜயநகரா, சிக்கமகளூரு, ராம்நகர், சிக்கபல்லாபூர் உட்பட, 16 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.இது தொடர்பாக, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்ட கலெக்டர்கள் கணக்கில் இருந்து, ஒவ்வொரு கிராமங்களுக்கும் குடிநீர் வினியோக்க, நிதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் டேங்கர்கள் மூலம், குடிநீர் வினியோகிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.கிராம வளர்ச்சி துறை, ஆலோசனை கூட்டம் நடத்தி, குடிநீர் வழங்குவது குறித்து, மாவட்ட நிர்வாகங்களுக்கு ஆலோசனை கூறுகிறது.

நிபந்தனைகள்

கிராமப்பகுதிகளில் புதிதாக போர்வெல் தோண்ட, நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது. பல இடங்களில் தனியார் டேங்கர்களை வாடகைக்கு எடுத்து, குடிநீர் வழங்குகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ