உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புத்தாண்டை கொண்டாட ஆர்வம்: கர்நாடகா சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 புத்தாண்டை கொண்டாட ஆர்வம்: கர்நாடகா சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பெங்களூரு: புத்தாண்டு நெருங்குவதால், கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டேக்கள் மற்றும் ஹோட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. புத்தாண்டான 2026ஐ வரவேற்க மக்கள் தயாராகின்றனர். புத்தாண்டை கொண்டாட சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். கர்நாடகாவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, உலகம் முழுதும் நல்ல மவுசு உள்ளது. குறிப்பாக, சிக்கமகளூரு மாவட்டத்தை அதிகம் விரும்புகின்றனர். இங்குள்ள முல்லய்யனகிரி, பாபாபுடன்கிரி, சீதாளய்யனகிரி, சிருங்கேரி, ஹொரநாடு, குதுரேமுக் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் புத்தாண்டு கொண்டாடுவது பலருக்கும் வழக்கம். இயற்கை அழகை ரசித்தபடி, புத்தாண்டை கொண்டாடுவது புதிய அனுபவத்தையும் அளிக்கும். இதை அனுபவிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். அதனால், ரிசார்ட்டுகள், ஹோம் ஸ்டேக்கள் மற்றும் ஹோட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பே, அறைகளை முன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக ரிசார்ட், ஹோம்ஸ்டேக்களின் உரிமையாளர்கள் பார்ட்டி, பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மாண்டியா மாவட்டத்தின், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.எஸ்., குடகு மாவட்டத்தின் மடிகேரி, விராஜ்பேட், சோமவாரபேட் , கொப்பாலின் அஞ்சனாத்ரி மலை, மைசூரு அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை உட்பட, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. அவர்களால்,சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ