கலபுரகியின் சிஞ்சனசூர் கிராமத்தில் நிலநடுக்கம்
கலபுரகி: ஆளந்தா தாலுகாவின் சிஞ்சனசூர் கிராமத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கலபுரகி மாவட்டம், ஆளந்தா தாலுகாவின் சிஞ்சனசூர் கிராமத்தில் நேற்று காலை 8:30 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் இருந்து பெரும் சத்தம் வந்தது. வீடுகளில் பொருட்கள் சிதறி விழுந்தன. மக்கள் பயந்து அலறி வீட்டில் இருந்து வெளியே ஓடினர். தகவல் அறிந்து, சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை அதிகாரிகள் சிஞ்சனசூர் கிராமத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். 'சிறிய அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயப்பட வேண்டாம்' என, தைரியம் கூறினர். இதுதொடர்பாக இயற்கை பேரிடர் கண்காணிப்பு நிலைய விஞ்ஞானிகள் கூறியதாவது: சிஞ்சனசூர் கிராமத்தில் நேற்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அளவீடு சாதனத்தில் 2.3 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் பயப்பட வேண்டியது இல்லை. சிஞ்சனசூர் கிராமம் மட்டுமின்றி, கலபுரகி நகரின் சில இடங்களிலும், நில நடுக்க அனுபவம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.