காங்., - எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி வீட்டில் ஈ.டி., அதிரடி... ரெய்டு! : கேமிங் செயலி மூலம் சட்டவிரோத வருவாய் ஈட்டியதாக புகார்
சித்ரதுர்கா காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி. இவர் கோவா உட்பட, பல்வேறு இடங்களில் காசினோ, கிளப்கள் நடத்தி வருகிறார். இவர் 'கிங் 567, பப்பீஸ் 003, ரத்னா கேமிங்' என்ற பெயர்களில், விதிமீறலாக 'ஆன்லைன்' சூதாட்டம் நடத்தி, சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கிறார். இந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவரது சகோதரர் திப்பேசாமி, துபாயில் 'டைமண்ட் சாப்டெக், டி.ஆர்.எஸ்., டெக்னாலஜிஸ், பிரைம் 9 டெக்னாலஜிஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களை நடத்துகிறார். இந்நிறுவனங்களில் வீரேந்தி பப்பி, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அமலாக்கத்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கே, வீரேந்திர பப்பிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சித்ரதுர்காவில் ஆறு இடங்கள், பெங்களூரில் பத்து இடங்கள் உட்பட, பெங்களூரு ரூரல், ஹூப்பள்ளி, பெலகாவியின், 30க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடந்தது. அவரது வீட்டில், ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது குடும்பத்தினர் நடத்தும் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனங்கள், கோவாவில் உள்ள பப்பீஸ் காசினோ, கோல்டு ஓபன் ரிவர்ஸ் காசினோ, பப்பீஸ் காசினோ பிரைடு, ஒபன் 7 காசனோ, பிக் டேடி காசினோ மற்றும் கிளப்களிலும் சோதனை நடந்தது. முக்கியமான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமலாக்கத்துறை சோதனை நடந்தபோது, வீரேந்திர பாப்பி, சிக்கிம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது தாய் ரத்னம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். சோதனை குறித்து தகவல் தெரிவித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வீரேந்திர பப்பியை கொல்கத்தாவில் இருந்து, பெங்களூருக்கு அழைத்து வருகின்றனர். இதற்கிடையே அவரது சகோதரர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, வீரேந்திர பாப்பியுடன், காங்கிரஸ் தலைவி குஸ்மா ஹனுமந்தராயப்பாவுக்கு, பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். எனவே பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள குஸ்மா வீட்டிலும், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அங்கும் சொத்து ஆவணங்கள், ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் 2023ல், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர். வீரேந்திர பப்பியின் வீட்டில் சோதனை நடப்பது, இது முதன் முறையல்ல. 2016 டிசம்பர் 11ம் தேதி, வருமான வரித்துறை அதிகாரிகள், இவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டின் குளியலறையில், ஐந்து கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், 30 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விசாரணையை எதிர்கொண் டுள்ள வீரேந்திர பப்பி, எந்த நேரத்திலும் கைதாகலாம். இது ஆளுங்கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என, காங்., தலைவர்கள் அஞ்சுகின்றனர்.