| ADDED : நவ 23, 2025 04:13 AM
பெங்களூரு: கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷனுக்கு, டிசம்பர் 7ல் தேர்தல் நடத்தும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 30ல், கே.எஸ்.சி.ஏ.,வுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அசோசியேஷனில் சில குழப்பங்கள் இருப்பதாக கூறி, தேர்தல் அதிகாரி பசவராஜு, டிசம்பர் 30க்கு தேர்தலை தள்ளிவைத்தார். இதை எதிர்த்து, கே.எஸ்.சி.ஏ., தலைமை செயல் நிர்வாக அதிகாரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், டிசம்பர் 7ல், கே.எஸ்.சி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்தும்படி, நேற்று முன் தினம் உத்தரவிட்டார். உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: டிசம்பர் 7ம் தேதி காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தேர்தல் நடத்தி, அன்றே முடிவை அறிவிக்க வேண்டும். தேர்தல் பொறுப்பை ஏற்கும்படி, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ் ஆதியிடம், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. நவம்பர் 24ல் வேட்புமனு பரிசீலனை நடக்கும். அன்று மாலை 6:00 மணிக்குள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். வேட்புமனு வாபஸ் பெற, நவம்பர் 26 கடைசி தேதி. அதே நாளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.