கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல்!: விஜயேந்திராவுக்கே மீண்டும் வாய்ப்பு?
பெங்களூரு: கர்நாடக பா.ஜ., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த மேலிடம் தயாராகிறது. தற்போதைய தலைவர் விஜயேந்திராவுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே முதல் வாரமோ, தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ., மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து, தேசிய தலைவர் நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலத் தலைவர் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு
இம்மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரமோ, தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து, மாநில பா.ஜ., தலைவர்கள், 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' நடத்துகின்றனர். இம்மாத இறுதியில் யாத்திரை முடிந்த பின், மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படலாம்.கர்நாடகாவில் வரும் நாட்களில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மாநிலத் தலைவராக இருக்கும் விஜயேந்திராவை மாற்றினால் தேவையின்றி பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பா.ஜ., மேலிடம் கருதுகிறது.காங்கிரஸ் அரசின் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையால், லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயத்தினர் கொதிப்படைந்துள்ளனர். இந்த விஷயம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுக்கிறது.பல்வேறு மடாதிபதிகளும் கூட, இந்த அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்புக் குரல் ஒலிக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பா.ஜ., மேலிடத் தலைவர்களின் எண்ணமாகும்.எனவே அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும், மாநில தலைவராக விஜயேந்திராவை நீட்டிக்க வேண்டும். அவரது தலைமையில் கட்சியை பலப்படுத்தி, அடுத்த சட்டசபை தேர்தலில், பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என, அவர்கள் கணக்குப் போடுகின்றனர்.அதற்கு முன்பாக மாநிலத்தில் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கர்நாடக பா.ஜ., மாநிலத் தலைவராக விஜயேந்திரா, 2023 நவம்பரில் பொறுப்பேற்றார். வயதிலும், அரசியல் அனுபவத்திலும் குறைந்த இவரை மாநிலத் தலைவராக நியமித்ததை, மூத்த தலைவர்கள் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கோபத்தை வெளிப்படையாக கொட்டித் தீர்த்தனர். கட்சிக்குள் அதிருப்தி அலை வீசியது.'முன்னாள் முதல்வரின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து, விஜயேந்திராவை மாநிலத் தலைவராக்கியது சரியல்ல' என, பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உட்பட, பல தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் இதை மேலிடம் கண்டு கொள்ளவில்லை. அதிரடி
விஜயேந்திராவை மாற்றுவதற்கு பசனகவுடா பாட்டீல் எத்னால், அதிகபட்சம் முயற்சித்தார். இறுதியில் அவரையே கட்சியில் இருந்து மேலிடம் அதிரடியாக நீக்கியது. ஒழுங்கின்மையை சகித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்த்தியது.ஆனாலும், 'மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை மாற்ற வேண்டும். அதுவரை கட்சியின் நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்பதில்லை' என, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி சபதம் செய்திருந்தார். பெலகாவியில் 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' நடந்தபோதும், அவர் பங்கேற்கவில்லை.பசனகவுடா பாட்டீல் எத்னால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ரமேஷ் ஜார்கிஹோளி கோஷ்டி வலுவிழந்துள்ளது. தற்போதைக்கு அதிருப்தி தலைவர்கள் மவுனமாகி உள்ளனர்.அண்மையில் தமிழகத்தில் பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது போன்று, கர்நாடகாவிலும் போட்டியின்றி தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கட்சி மேலிடத்தின் எண்ணம்.ஆனால் மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கும்போது, அதிருப்தி கோஷ்டியினர் களமிறங்கினால், அதை மேலிடமும் விஜயேந்திராவும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.