குப்பையில் இருந்து மின்சாரம்: 1 லட்சம் வீடுகளுக்கு பயன்
பெங்களூரு: ''ஈரம், உலர்ந்த குப்பையை பொது மக்கள் தரம் பிரித்து வழங்கினால், குப்பையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, ஒரு லட்சம் வீடுகளுக்கு வழங்க முடியும்,'' என, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை கழக தலைமை நிர்வாக அதிகாரி கரீ கவுடா தெரிவித்தார். பெங்களூரில் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் மற்றும் கே.பி.சி.எல்., எனும் கர்நாடக மின் கழகத்துடன் இணைந்து, பிடதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை, அதிகாரிகளுடன் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை கழக தலைமை நிர்வாக அதிகாரி கரீ கவுடா பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: பிடதியில் 314.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட உள்ள மின் உற்பத்தி மையம், ஒரு வாரத்திற்கு தினமும் 200 டன் உலர் குப்பையை பெறும். இதன் மூலம், 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் கொள்ளளவுக்கு ஏற்ப, 600 டன் உலர் குப்பை வழங்கப்பட்டால், தினமும் 11.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதனால், ஒவ்வொரு வீடும் சராசரியாக தினமும் 5 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால், 25 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். நகரின் அனைத்து குப்பையையும் தரம் பிரித்து சேகரித்தால், இதுபோன்று கூடுதலாக மூன்று மையங்கள் நிறுவலாம். இதன் மூலம் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சரம் வழங்க முடியும். குப்பையில் 35 சதவீதம் பிளாஸ்டிக் இருப்பதாக மதிப்பிடப்பட்டுஉள்ளது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்குகள், உலர்ந்த குப்பை சேகரிப்பு மையங்கள் மூலம், மறுசுழற்சி செய்யப்படுகின்றன. குறைந்த தரம் கொண்ட பிளாஸ்டிக்குகள் மட்டுமே பிடதி அலகுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது மண்டூரில் உள்ள குப்பை சேகரிப்பு அலகுகளில் இருந்து தினமும் 400 டன் குப்பை, ஆர்.டி.எப்., எனும் மறு பயன்பாட்டு பெறப்பட்ட எரிபொருள், இம்மையத்துக்கு வழங்கி வருகிறது. வீடுகளில் இருந்து தினமும் 200 டன் பிளாஸ்டிக், உலர் குப்பை உட்பட மொத்தம் 600 டன் குப்பை, இந்த மையத்துக்கு அனுப்பப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் 500 டன் உலர் குப்பையை அனுப்ப, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிடதியில் கட்டப்பட்டுள்ள மையம், 163 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நாட்டில் உள்ள 10 மையங்களில், கர்நாடகாவில் உள்ள முதல் மையம் இது தான். இவ்வாறு அவர் கூறினார்.