மக்காச்சோளத்தை தின்ற யானை; விவசாயிக்கு பெருமளவில் நஷ்டம்
சாம்ராஜ் நகர் : விவசாயி ஒருவர் அறுவடை செய்து வைத்திருந்த மக்காச்சோளத்தை, காட்டு யானை தின்று விட்டதால், பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து, மக்களை அச்சுறுத்தும். தோட்டம், வயல்களில் நுழைந்து விவசாயிகளின் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தும்.சில நாட்களில் 15 முதல் 20 யானைகளும் கூட்டமாக வருவதுண்டு. தினமும் காலை தோட்டங்களுக்கு செல்லும் போது, யானை எங்கிருந்து வந்து தாக்குமோ என்ற பீதியில் விவசாயிகள் செல்வர். வீட்டு வளாகத்துக்கு யானைகள் வருவதால், சிறு குழந்தைகளை வெளியே விடவும் பெற்றோர் அஞ்சுகின்றனர். பயிர்களை பறிகொடுத்து நஷ்டம் அடைகிறன்றனர்.சாம்ராஜ் நகர் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா புரா கிராமத்தில் வசிக்கும் விவசாயி குருசாமி, தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். செழிப்பாக வளர்ந்திருந்தது. அறுவடை செய்து பண்ணை வீட்டு வளாகத்தில் குவித்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த காட்டு யானை, மக்காச்சோளத்தை தின்றது.அப்போது அங்கிருந்த பெண்ணொருவர், யானையை பார்த்து, 'போதும் சாமி சாப்பிட்டது, தயவு செய்து இங்கிருந்து செல்' என மன்றாடினார். ஆனால் யானை மொத்த மக்காச்சோளத்தை தின்று, காலி செய்துவிட்டு அங்கிருந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது.மாதக்கணக்கில் பாடுபட்டு விளைவித்ததை, யானை சில நிமிடங்களில் தின்று விட்டது என, விவசாயி வருந்துகிறார். இதனால் அவருக்கு பெருளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.