இந்திரா உணவகத்தில் ஊழியர் குளியல் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி
ஹாவேரி: ஏழைகளுக்கு குறைந்த விலையில், தரமான உணவு கிடைக்க வேண்டும் என்பதால், 'இந்திரா உணவகம்' திட்டத்தை முதல்வர் சித்தராமையா செயல்படுத்தினார். ஆனால் உணவகங்களில் சுகாதாரம் இல்லை என்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திரா உணவகம் திட்டம், முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டமாகும். ஏழைகள், கூலி தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என, ஏழைகளுக்கு குறைந்த விலையில், தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இத்திட்டத்தை செயல்படுத்தினார். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், இந்திரா உணவகங்கள் செயல்படுகின்றன. பெரும்பாலான உணவகங்களில், உணவு தரமாக இல்லை. உணவகம் துாய்மையாக இல்லை. சமையல் அறை அசுத்தமாக உள்ளது என, வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உணவகத்திலேயே, ஊழியர் குளிக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. ஹாவேரி மாவட்டம், ஷிகாவி நகரின் பஸ் நிலையத்தில், இந்திரா உணவகம் உள்ளது. பயணியர் பலரும் இங்கு உணவருந்த வருகின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன், உணவக ஊழியர் சமையல் அறையிலேயே குளித்துள்ளார். ஒரு பக்கம் சமையல் நடக்கிறது. மற்றொரு பக்கம் இவர் குளிக்கிறார். இதை கவனித்த ஊடகத்தினர், கேள்வி எழுப்பிய போது, அடிப்படை வசதி இல்லை. இங்கு குளிப்பதாக கூறியுள்ளார். இந்திரா உணவக சமையல் அறையில், ஊழியர் குளிப்பதை, உணவருந்த வந்த ஒருவர், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது பரவியுள்ளது. பலரும் இதை கண்டித்துள்ளனர். 'உணவு தயாரிக்கும் இடத்தை, குளியல் அறையாக பயன்படுத்துவது சரியா. இங்கு உணவருந்தும் மக்களின் கதி என்ன' என, கேள்வி எழுப்பி உள்ளனர்.