கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களும் ஊழல் தடுப்பு சட்டத்துக்குள் வருவர்
பெங்களூரு : 'மத்திய, மாநில அரசுகளிடம் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்களும், ஊழல் தடுப்பு சட்ட எல்லைக்கு உட்படுவர்,' என கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. ஹாசன் மாவட்டத்தின் ஹி ரேகடலுார் விவசாய கூட்டுறவு சங்க செயலராக பணியாற்றுபவர் கீர்த்திகுமார். இவர் ஊழலில் ஈடுபடுவதாக, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அனுமதி அளிக்கும்படி, கூட்டுறவு சங்கத்திடம், லோக் ஆயுக்தா அதிகாரிகள் கோரினர். கூட்டுறவு சங்கங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியில் செயல்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், ஊழல் தடுப்பு சட்ட எல்லைக்குள் வரமாட்டார்கள் என கூறி கீர்த்திகுமாரிடம் விசாரிக்க அனுமதி நிராகரித்து, கூட்டுறவு சங்கம் தீர்மானம் கொண்டு வந்தது. இது குறித்து கேள்வி எழுப்பி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தாவினர் மனு தாக்கல் செய்தனர். மனு குறித்து, நீதிபதி நடராஜ் முன்னிலையில் விசாரணை நடந்தது. வாத பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி, 'கூட்டுறவு சங்கங்கள், அரசு நிறுவனங்கள் அல்ல. ஆனால், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு - 2 சி யில் கூறியபடி, மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், செயலர் அல்லது மற்ற நிர்வாகிகள் மீது ஊழல் புகார் வந்தால் லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தலாம்' என கூறி விவசாய கூட்டுறவு சங்க செயலர் கீர்த்தி குமாரிடம் விசாரணை நடத்த, அனுமதி அளிக்கும்படி கூட்டுறவு சங்கத்துக்கு உத்தரவிட்டார்.