உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பொறியியல் பட்டதாரியிடம்   ரூ.17.60 லட்சம் மோசடி

பொறியியல் பட்டதாரியிடம்   ரூ.17.60 லட்சம் மோசடி

மங்களூரு: பிரபல தனியார் நிறுவனத்தில் டீலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி, பொறியியல் பட்டதாரியிடம் 17.60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. மங்களூரு பன்ட்வாலை சேர்ந்தவர் வாலிபர் விக்ரம் பிரபு. பொறியியல் பட்டதாரி. இவரது மொபைல் போனுக்கு கடந்த ஜூலை 4ம் தேதி ஒரு அழைப்பு வந்து உள்ளது. அழைப்பில் பேசிய நபர், தன்னை பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளர் நிலேஷ் மிஷ்ரா என கூறியுள்ளார். எனது நிறுவனத்தின் மூலம் டீலர்ஷிப் முறையில் பணிபுரிந்தால், லட்சங்களில் சம்பாதிக்கலாம் என கூறினார். இதை நம்பிய விக்ரம், அவர் கேட்ட வங்கி, பான் கார்டு என அனைத்து ஆவணங்களையும் கொடுத்தார். இதையடுத்து, அந்நபர் மீண்டும் தொடர்பு கொண்டு விக்ரமிடம் மென்பொருள், டீலர்ஷிப் கட்டணங்களை செலுத்துமாறு கூறியுள்ளார். அவர் கூறிய வங்கி கணக்குக்கு, விக்ரமும் ஒரே தவணையாக இல்லாமல், பல தவணையாக 17.60 லட்சம் ரூபாய் பணம் அனுப்பி உள்ளார். இதையடுத்து, அந்நபர் கடந்த 11ம் தேதி, அனைத்து பொருட்களும் பெங்களூருக்கு அனுப்பப்படும். அந்த பொருட்கள் மூலம் வியாபாரத்தை தொடங்கலாம் என குறிப்பிட்டு உள்ளார். இதை கேட்டு விக்ரம் சந்தோஷமாக இருந்தார். ஆனால், அந்நபர் குறிப்பிட்டது போன்று எந்த பொருட்களும் வரவில்லை. இதையறிந்த விக்ரம், அந்நபருக்கு மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால், அந்நபரின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' என வந்ததும், தான் ஏமாற்றப்பட்டதை விக்ரம் உணர்ந்து கொண்டார். இது குறித்து, தட்சிண கன்னடா சி.இ.என்., எனும் குற்றம், பொருளாதாரம், போதைப்பொருள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !