கிருஷ்ணா நதியில் முதலையிடம் சிக்கிய விவசாயி
விஜயபுரா: கிருஷ்ணா நதியில் கால்நடையை குளிப்பாட்ட சென்ற விவசாயியை, முதலை இழுத்துச் சென்றது. அவரை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். விஜயபுரா மாவட்டம், முத்தேபிகலின் தங்கட்கி கிராம பஞ்சாயத்து உட்பட்ட குஞ்சகனுார் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாத் ஹனுமந்த் காம்ப்ளி, 38; விவசாயி. இவர், நேற்று காலையில் கால்நடைகளை குளிப்பாட்ட, கிருஷ்ணா நதிக்கு அழைத்துச் சென்றார். நதியில் கால்நடையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, முதலை ஒன்று, காசிநாத்தின் காலை பிடித்து, தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த தாரேப்பா, இதை கிராமத்தினரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காசிநாத்தை கண்டு பிடிப்பதற்காக, கூடலசங்கமத்தில் இருந்து படகு வரவழைக்கப்பட்டு, கிருஷ்ணா நதியில் தேடி வருகின்றனர். காசிநாத்தை முதலை இழுத்துச் சென்றதை அறிந்த மக்கள், அச்சம் அடைந்துள்ளனர்.