டவுன்ஷிப் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் விவசாயிகள் தற்கொலை முயற்சி
ராம்நகர் : பிடதியில் 'டவுன்ஷிப்' அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டக் களத்தில் இரு பெண் விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டவுன்ஷிப் அமைப்பதற்காக, ராம்நகரின் பிடதி, அதை சுற்றியுள்ள கிராமங்களில் 9,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகள், நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 'எக்காரணம் கொண்டும் திட்டத்தை கைவிட மாட்டோம்; நிலத்திற்கு அதிக விலை தருகிறோம்' என துணை முதல்வர் சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதை ஏற்க மறுத்த விவசாயிகள் கடந்த 12ம் தேதியில் முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்தும் பைரமங்களா கிராமத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத், மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா நேற்று சென்றனர். விவசாயிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அசோக் பேசுகையில், ''நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எதற்கும் கவலைப்பட வேண்டாம். 'எங்கள் நிலம், எங்கள் உரிமை' என்று போராட்டம் நடத்துகிறீர்கள். இதை அரசு கவனிக்கவில்லை. உங்கள் நிலத்தை பறித்து, அதிக விலைக்கு நில மாபியாக்களுக்கு விற்க போகின்றனர்,'' என்றார். அஸ்வத் நாராயணா பேசிக் கொண்டு இருந்தபோது, போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண் விவசாயிகள் விஷம் குடிக்க முயன்றனர். அவர்கள் கையில் இருந்த விஷ பாட்டில்களை, சக பெண் விவசாயிகள் பறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.