உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதை பொருள் வழக்குகளில் தண்டனை பெறுவோர் குறைவு

போதை பொருள் வழக்குகளில் தண்டனை பெறுவோர் குறைவு

பெங்களூரு: போலீசார் நடவடிக்கை எடுத்தும், பெங்களூரில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை. பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தண்டனை பெறும் விகிதம் குறைந்துள்ளது. இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த, போலீஸ் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. ஆனால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில், கர்நாடகாவில் என்.டி.பி.எஸ்., எனும் போதைப் பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், 23,869 வழக்குகள் பதிவாகின. இவற்றில் 9,534 வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், என்.டி.பி.எஸ்., சட்டத்தின் கீழ், 12,573 வழக்குகள் பதிவாகின. இவற்றில் 5,416 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூருடன் ஒப்பிட்டால், மங்களூரு, பெலகாவி, மைசூரு நகரங்களில் போதைப் பொருள் வழக்குகள் குறைந்துள்ளன. போதைப் பொருள் விற்பது எந்த அளவுக்கு குற்றமோ, அதே அளவுக்கு அதை வாங்கி பயன்படுத்துவதும் குற்றமாகும். இதற்கு முன்பு போதைப் பொருள் வாங்கியவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் சில போலீசார், போதைப் பொருள் வாங்குவோரை மிரட்டி, பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். இது உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. போலீசார் பணம் பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், என்.டி.பி.எஸ்., சட்டத்தின் கீழ், போதைப் பொருள் வாங்குவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. தற்போது போதைப் பொருள் வாங்குவோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். போதைப் பொருள் விற்றவர், வாங்கியவர்களுக்கு எதிரான சாட்சிகளை சேகரித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். சாட்சிகள் பற்றாக்குறையால், இவர்கள் விடுதலையாகாமல் பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ