சார்ஜிங் மையத்தில் தீ 19 பைக் எரிந்து சாம்பல்
எலச்சனஹள்ளி: 'சார்ஜிங்' மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 19 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன. பெங்களூரு, எலச்சனஹள்ளியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சார்ஜிங் செய்யும் மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சார்ஜிங் செய்வதற்காக இந்த மையத்திற்கு 25 க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வந்தன. நேற்று காலை 7:00 மணியளவில், சார்ஜிங் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாக பரவி, ஸ்கூட்டர்கள் மீது பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த குமாரசாமி லே - அவுட் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஸ்கூட்டர்களில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும், 19 ஸ்கூட்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவா வேறு எதுவும் காரணமா என விசாரணை நடக்கிறது.